சூர்யா அறிக்கையில் ஒற்றை நபர் குற்றங்காண முயன்ற போதும், தமிழகத்தில் சட்டந்சார்ந்தும்கூட பெரும்பான்மையோர் அந்தக் குற்றச்சாட்டுக்கு அங்கீகாரம் மறுத்த நிலையில். அறங்கூற்றுமன்றம் சூர்யா மீது மதிப்புக்குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை எழவில்லை. 02,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: நடிகர் சூர்யா வெளியிட்ட, நீட் பாதிப்பால் மாணவர்களின் தற்கொலை தொடர்பான ஒரு அறிக்கை, சில நாட்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அறங்கூற்றுமன்றங்கள் காணொளி கலந்துரையாடல் மூலமாக தீர்ப்பு வழங்கும் நிலையில், மாணவர்களை மட்டும் தேர்வு எழுத வர சொல்வது நியாயமா என்ற தொனியில் அந்த அறிக்கையில் சூரிய கேள்வி எழுப்பியிருந்தார். அதையொட்டி சென்னை உயர்அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் ஏ.பி.சாகிக்கு, அறங்கூற்றுவர் சுப்பிரமணியம் ஒரு மடல் எழுதியிருந்தார். அதில், சூர்யாவின் கருத்துக்கள் அறங்கூற்றுவர் மற்றும் உயர் அறங்கூற்றுமன்றத்தின் மாண்புக்கு எதிராக இருப்பதாகவும், எனவே சூர்யா மீது அறங்கூற்றுமன்ற மதிப்புக்குறைப்பு நடவடிக்கை எடுத்து அறங்கூற்றுமன்ற மாண்பை காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, சூர்யா மீது அறங்கூற்றுமன்ற மதிப்புக்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற பரபரப்பான சூழ்நிலை உருவானது. ஆனால் இதற்கு நடுவே, முன்னாள் அறங்கூற்றுவர்கள், சந்துரு, சுதந்திரம், அரிபரந்தாமன், அக்பர் அலி மற்றும் கண்ணன் ஆகியோர் தலைமை அறங்கூற்றுவருக்கு, ஒரு மடல் எழுதினர். சூர்யா மீதான குற்றச்சாட்டை பெருந்தன்மையாக கடந்து செல்லலாம் என்று கேட்டுக் கொண்டனர். இந்தப்பாட்டில் தமிழக தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் என்ன கருத்து கூறுகிறாரோ அதை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உயர்அறங்கூற்றுமன்றம் ஆயத்தமானது. அறங்கூற்றுவர் எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய மடல் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்புக்காக அனுப்பப்பட்டது. சூர்யா மீது நடவடிக்கை தேவை இல்லை என்று தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தலைமை அறங்கூற்றுவர் அமர்வு இந்த சிக்கலுக்கு, சூர்யா மீது அறங்கூற்றுமற்ற மதிப்புக்குறைப்பு நடவடிக்கை தேவையில்லை என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



