Show all

கொள்ளையர்களை மதிமயக்கிய தங்கப்பூச்சு நகைகள்!

தங்க நகை என்று நினைத்து தங்கப்பூச்சு நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றது சேலத்தைப் பரபரப்பு ஆக்கியுள்ளது.

03,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்திலேயே எவர்சில்வர் கொளுசுகள், தங்கப்பூச்சு நகைகளுக்கு பேரறிமுகமான மாவட்டம் சேலம். இந்த சேலம் மாவட்டத்து தங்கப்பூச்சு நகைகள் கொள்ளையர்களையே தங்க நகைகள் என்பதாக மதிமயங்கச் செய்திருக்கிற விந்தை சேலத்தை பரபரப்பாக்கியிருக்கிறது. 

சேலம் தாதகாபட்டியில் உணவகத் தொழிலாளி வீட்டில் தங்க நகை என்று தங்கப்பூச்சு நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஒபுலிசாமி என்பவர் வசித்து வருகிறார். உணவகத் தொழிலாளியான இவர் வழக்கம் போல நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் நிலைப்பேழையை உடைத்து நிலைப்பேழையில் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மணப்பெண்களை அலங்கரிக்கும் நான்கு இணை தங்கப்பூச்சு நகைகளை தங்க நகைகள் என்று எண்ணி திருடியுள்ளனர். 

மேலும் நிலைப்பேழையில் இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 15 பட்டுப் புடவைகளையும், வீட்டு பத்திரங்களையும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்பேசிகளையும் மர்மநபர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஒபுலிசாமி அளித்த புகாரின் அடிப்படையில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.