கொரோனா பாதிப்பிலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் மீண்டதன் காரணம் இதுதான். தொடர்ந்து படியுங்கள். 20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா என்கிற அடிப்படையில் எதிர்க்கட்சிகள் விவாதித்தன. மருத்துவமனை பால்கனிக்கு வந்த டிரம்ப், தனக்கு கொரோனா ஏற்பட்டதும் 72 மணிநேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறினார். மேலும், 'கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள். அனைவரும் தைரியமாக இருங்கள்” என்றார். கொரோனாவுக்கு இடையிலும் டிரம்ப் தனது கருத்துப்பரப்புதலைக் கைவிடாதது எதிர்க்கட்சிகளை வியக்க வைத்துள்ளது. 'கொரோனா காலத்தில் தேர்தல் கருத்துப்பரப்புதல் போன்ற கடும் பணிகளில் ஈடுபடுவது ஆபத்து என எனக்கு தெரியும். ஆனால் மக்களுக்குச் சேவை ஆற்றுவது என்னுடைய கடமை. அதனால் என்னுடைய வேலையை தொடங்கிவிட்டேன். ஒருவேளை எனக்கு எதிர்ப்புசக்தி அதிகமாக உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் நான் மன வலிமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன்” என்று டிரம்ப் உணர்ச்சிப்பாடாகப் பேசினார். டிரம்ப் நல்ல நலத்துடன் இருப்பதற்கு முதன்மையான காரணம் அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சையே ஆகும். டிரம்புக்கு சிகிச்சை அளிப்பதற்கு ‘ரிஜெனரல் எக்பெரிமெண்டல் ஆன்டிபாடி தெரபி’ என்ற சிறப்புச் சிகிச்சை முறைக்கு அவர் உட்படுத்தப்பட்டார். இந்தமுறை இதற்கு முன்னர் 275 நோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி அடைந்தது. இந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது சாமானியர்களுக்குச் சாத்தியப்படாத ஒன்று. இந்தச் சிகிச்சையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு இதுவரை அங்கீகரிக்கவில்லை. அங்கீகரிக்கப்படாத சிகிச்சையை அமெரிக்க குடிமக்கள் பெற இயலாது. ஆனால் டிரம்புக்கு மட்டும் சிறப்பாக இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



