Show all

நிக்கோலா டெஸ்லா என்பவர் யார் என்று தெரியுமா உங்களுக்கு?

உலகப் புகழ் பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் காலத்தில் வாழ்ந்த மற்றொரு இயல்அறிவர் (சயின்டிஸ்ட்). தொடக்க காலத்தில் காப்புரிமை வாங்காமல் கண்டுபிடிப்புகளை வெளிக் கொணர்வதில் சிக்கலுக்கு உள்ளான இவர்- சாகும்போது 300 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளின் பேட்டன்ட் உரிமைகளை வாங்குவதற்கு செலவிட்டே வறுமையில் உழன்றார்.

20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நிக்கோலா டெஸ்லா என்பவர் யார் என்று தெரியுமா உங்களுக்கு? நாம் இன்று பயன்படுத்தும் அனைத்து நவீன இயல்அறிவு சாதனங்களிலும் இவர் கண்டுபிடித்த எதாவது ஒரு அடிப்படை பொருள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

இவர் 164 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செர்பிய குடும்பத்தில் ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தவர். சிறுஅகவை முதலே மின்னியல் மற்றும் ஒளியியல் சார்ந்த கருத்துருக்களில் ஈடுபாடு உடையவர். எடிசனுக்கு உதவியாளராகக் கூட இவர் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார். 

மாறுதிசை மின்னோட்டத்தைக் கண்டுபிடித்து இயல்அறிவுத் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் டெஸ்லா. இந்த கண்டுபிடிப்பின் தொடக்கத்தில் எடிசனால் இவருக்கு ஏற்பட்ட சிக்கல்களைத் தாண்டி இவருடைய கண்டுபிடிப்பை நிலை நிறுத்துவதற்கு இவர் மிகுந்த சிரமப்பட்டாராம். இது மட்டுமின்றி எக்ஸ் ரே இயந்திரத்தின் கண்டுபிடிப்பை நிக்கோலா டெஸ்லா கைவிட்டதற்கும் எடிசன்தான் காரணம் என்ற ஒரு செய்தியையும் அறிய முடிகின்றது.

எடிசன் ஒரு திசை மின்சாரத்தை கண்டுபிடித்திருந்தார். டெஸ்லா இன்றைக்கு பெரும்பயன்பாடாக நடைமுறையில் இருக்கிற மாறுதிசை மின்னோட்டத்தைக் கண்டுபிடித்தார். எடிசனின் ஒரு திசை மின்சாரம் அன்று விளக்குகளில் நன்கு வேலை செய்தது, ஆனால் அவற்றால் நீண்ட தூரத்திற்கு மின்சாரத்தை பரிமாறிக்கொள்ள முடியவில்லை.

எந்த மின்சாரம் சிறந்தது என்பதைக் கண்டறிய ‘மின்சாரப் போர்’ எனும் போட்டி நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இறுதியில் எடிசன் வெற்றி பெறவே டெஸ்லாவின் பெயர் மெல்ல மக்களுக்கு மறையத் தொடங்கியது. மாறுதிசை மின்சாரம் ஆபத்தானது என மக்களை நம்பவைக்க விலங்குகளின் மேல் அதனைப்பாய்ச்சி கொன்றதாக எடிசன் மேல் குற்றச்சாட்டு உண்டு. ஒன்றல்ல இப்படி டெஸ்லாவின் புகழைக் கட்டுப்படுத்த எடிசன் செய்த வேலைகளைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் என்கின்ற டெஸ்லாவுக்கு ஆதவரவான கோவப்பதிவுகளும் கிடைக்கின்றன.

மார்க்கோனி வானொலி கண்டுபிடிப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் கண்டுபிடித்துவிட்டார். அமெரிக்க ஒன்றிய அறங்கூற்றுமன்றத்தின் மூலம் வானொலியின் முதன்மை உரிமம் டெஸ்லாவுக்கு அளிக்கப்பட்டாலும் நோபல் பரிசு வாங்கியதன் விளைவாக மார்கோனிக்கே இந்தப் பெருமை சென்றடைந்துள்ளது.

மார்க்கோனிக்கு 1909-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகு, 1915-ம் ஆண்டு தாமசு ஆல்வா எடிசன் மற்றும் டெஸ்லாவிற்கும் பரியியலுக்கான நோபல் பரிசு, பகிர்ந்தளிப்பதாக வெளியான தகவல் மிகப்பெரிய பிணக்குகளை உருவாக்கியது. இருவருக்குமான பகைமையையும் இது வளர்த்தது, இருவரும் அப்பரிசினை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை மற்றும் பரிசினை பகிர்ந்து கொள்ளவும் மறுத்துவிட்டனர்.

தொலைக் கட்டுப்பாட்டு கருவியை முதன்முதலாக கண்டுபிடித்தவர் டெஸ்லா. நயாகரா அறக்கட்டளை உதவியுடன் முதன்முறையாக வெற்றிகரமாக ஒரு நீர் மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கினார்.

மாறுதிசை மின்னோட்டத்துடன் வேலைசெய்யக்கூடிய தூண்டல் மின் சுழலியை இவர் கண்டுபிடித்தது வரலாற்றில் பெருஞ்சாதனையாகும்.

இப்போது நாம் அனைவரும் பயன்படுத்தும் மின்னனு சாதனங்களில் அடிப்படையாக கருதப்படுகிற டிரான்சிஸ்டர் மாதிரியை உருவாக்கினார்.

எலான் மஸ்க் தன்னுடைய கார் நிறுவனத்திற்கு டெஸ்லா என்ற பெயர் வைத்து இவரை பெருமைப் படுத்தியுள்ளார்.
காந்தப்புல அடர்த்திக்கான அடிப்படை அலகாக டெஸ்லா என்ற பெயர் பயன்படுத்தப் படுகிறது.
கிறிஸ்டோபர் நோலன் தான் இயக்கிய பிரஸ்டிஜ் திரைப்படத்தில் டெஸ்லாவின் கதாப்பாத்திரத்திற்கு முன்னுரிமை கொடுத்து பெருமைப் படுத்தியுள்ளார்.
இவருடைய பெயரில் ஒரு அருங்காட்சியகமும், ஒரு விமான நிலையமும் செர்பியா தலைநகரம் பெல்கிரேடில் அமைந்துள்ளது.

டெஸ்லா, சாகும்போது 300 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளின் பேட்டன்ட் உரிமைகளை வைத்திருந்தார்.  ஆனாலும் உணவுக்கு கூட பணமில்லாமல் பசியாலும் பட்டினியாலும் தனது 85 வது அகவையில் இறந்தார். அறிவியல் ஆராய்ச்சிக்காக திருமணம்கூட செய்யாமல் வாழ்ந்த போற்றுதலுக்கு உரிய இயல்அறிவர் டெஸ்லா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.