அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என அதிகாரப்பூர்வ உடற்கூறுஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என அதிகாரப்பூர்வ உடற்கூறுஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய நோய் மற்றும் அண்மைப் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜார்ஜ் ப்ளாய்ட்டின் உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 அகவை ஜார்ஜ் ப்ளாய்ட் காவலரின் பிடியில் இருக்கும்போது, காவலரின் கட்டுப்பட வைக்கும் முயற்சியால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததார் எனஅவரது மரணம் சட்டஅடிப்படையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்சோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில், நாளது 12,வைகாசி (மே 25) அன்று நடந்த கைது செய்யும் முயற்சியின்போது, அவர் உயிரிழந்தார். ஒரு காருக்கு அடியில் ஜார்ஜ் ப்ளாய்ட் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. ஜார்ஜ் ப்ளாய்ட் இறந்ததைக் கண்டித்து ஏழாவது நாளாக நடக்கும் போராட்டத்தால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் பற்றி எரிகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவேயும் அமெரிக்காவில் 75 நகரங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இந்த உத்தரவை மீறுவது பதட்டமான சூழலை ஏற்படுத்துகிறது. வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் போராட்டக்காரர்கள் மீண்டும் குவிந்து, அங்கிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க குடியரசுத் தலைவர்கள் தேவாலயம் உள்ளிட்ட கட்டடங்களுக்கு தீவைத்தனர். கலவரத் தடுப்பு அதிகாரிகள் மீது கற்களை வீசினர். பதிலுக்கு காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் தோட்டத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஓர் அதிபராக, அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் காப்பாற்ற வேண்டியது என் கடமை. அமெரிக்கச் சாலைகளில் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இராணுவம் அனுப்பப்படும் என்றார். கலவரம், கொள்ளை, தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களை அழிப்பதை நிறுத்தவும், சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இராணுவம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தத் தயார் என டிரம்ப் கூறினார். மேலும் அவர், அமெரிக்காவில் இப்போது நடப்பது அமைதியான போராட்டம் அல்ல. இவை உள்நாட்டுப் பயங்கரவாத செயல். அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிப்பதும், அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தப்படுவதும் மனிதக்குலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும், கடவுளுக்கு எதிரான குற்றமாகும் என்றார். ஜார்ஜ் ப்ளாய்ட்டின் மோசமான மரணத்தால் அமெரிக்கர்கள் கிளர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், கோபமான போராட்டக்காரர்களால் ஜார்ஜ் ப்ளாய்ட்டிற்கு செலுத்தப்படும் அஞ்சலி பாதிக்கப்படக்கூடாது என டிரம்ப் கேட்டுக்கொண்டார். பல மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் தங்களது குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன எனவும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களிடம் உரையாடிய பிறகு, போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டதில் சற்று சேதமடைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செயிண்ட் ஜான் தேவாலயத்திற்கு டிரம்ப் நடந்தே சென்றார். தேவாலயத்திற்கு வெளியே கையில் பைபிளை வைத்திருந்தபடி பேசிய டிரம்ப், நமது நாடு உலகின் சிறந்த நாடு. நான் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்போகிறேன் எனக் கூறினார். நாளது 12,வைகாசி (மே 25) அன்று, மினியாபொலிஸ் நகரில் மளிகைக் கடை ஒன்றில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் 20 டாலர் கள்ள ரூபாய்தாள் ஒன்று தந்ததாக வந்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க காவல்துறையினர் வந்துள்ளனர், காவல்துறை அவரை நெருங்கியபோது அவர் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். காணொளியில் ஜார்ஜ் ப்ளாய்ட் கைவிலங்கோடு காருக்கு அடியில் கிடப்பதால், காவல்துறையினர் அவரை வெளியில் இழுத்;து தள்ளியதை புரிந்து கொள்ள முடிவதாக சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகும் காவலர் ஒருவர் அவரது கழுத்தில் காலை வைத்து நெரித்திருப்பதிலிருந்து இனவெறியே விசாரணைக் கடுமைக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று பாதிக்கப்பட்டவரின் இனத்தவரால் கருதப்படுகிறது. காவல்துறையினர் பிடியில் இருந்தபோது ஜார்ஜ் இறந்துபோனார். இதனால் அமெரிக்கா முழுக்க போராட்டங்கள் தொடங்கின. இதனால் இனக் கொந்தளிப்பும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் இது டிரம்புக்கு பரிதாபகரமான அறநெருக்கடியே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



