மக்கள் கொரோனாவிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், நடுவண் பாஜக அரசு சந்தடி சாக்கில், மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவதால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆதரவோடு ஆங்காங்கே சமூக இடைவெளியையும் பேணி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பொதுத்துறையான மின்சாரத்துறையைத் தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. வேளாண்மை, குடிசை, நெசவு போன்ற தொழில்களுக்கு சமூக அக்கறையுடன் செயல்படுத்தி வரும் மாநில அரசின் மானிய திட்டங்களை நடுவண் அரசு முடக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களின் மின்வாரிய அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்கள், உழவர்கள் மற்றும் மின்நுகர்வோர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதேபோல் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கம், சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பொறியாளர் பிரிவு அரியலூர் மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன், சங்க உறுப்பினர் ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், ஐக்கிய சங்க செயற்குழு உறுப்பினர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மின்சாரத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் புதிய சட்டத்தை நடுவண் அரசு கொண்டுவந்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என, அமமுக பொதுச் செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் மின்பகிர்மானத்தை மொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் நடுவண் அரசு முன்மொழிந்திருக்கும் மின்சாரத் திருத்தச் சட்ட வரைவை சட்டமாக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பாதிப்பில் இருந்தே இந்தியா இன்னும் மீண்டு வராத ஊரடங்கு நேரத்தில், இப்படியொரு சட்டத்திருத்த முன்வரைவை மாநிலங்களின் கருத்துக்கேட்புக்கு அனுப்பியது ஏற்புடையதல்ல. மேலும், இச்சட்டத்திருத்தின் மூலம் மின் உற்பத்தி, பகிர்மானம் ஆகியவை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், உழவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம், வீடுகளுக்குக் கட்டணமில்லாமல் அளிக்கப்படும் முதல் 100 அலகு மின்சாரம் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படும். அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் போல எந்தக் கட்டுப்பாடும் அரசிடம் இல்லாமல், மின் கட்டணமும் அடிக்கடி உயர்ந்துகொண்டே இருக்கும். எனவே, மின்சார சட்டத்திருத்தத்தைக் கைவிட வேண்டும் என நடுவண் அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தற்போது நடுவண் மற்றும் மாநில அரசுகளுக்குப் பொதுவான ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள மின்சாரத்தை, மாநிலங்களின் ஒப்புதல் பெறாமலேயே மொத்தமாக நடுவண் அரசு கையில் எடுத்து சட்டம் நிறைவேற்றி தனியாரிடம் ஒப்படைக்க முனைவது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும். எனவே, எடப்பாடி பழனிசாமி அரசு இச்சட்டத்திருத்த முன்வரைவை ஏற்கவே கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஆனால்- எல்லா மக்கள் விரோதச்சட்ட முன்வரைவுகளையும் நிறைவேற்றியது போலவே இதையும் நிறைவேற்றிவிடும் நடுவண் பாஜக அரசு என்பதே உண்மை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



