Show all

முற்றிலும் புதிய நோக்கத்தோடு! செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்பியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம்- கல்வியை மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெற்று, விண்கலத்தைத் தாங்களே தயாரித்து, முற்றிலும் புதிய நோக்கத்திற்கு செவ்வாய் கோளுக்கு அனுப்பி, வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளே செவ்வாய் கோளுக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளன. முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கோளுக்கு விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்து உள்ளது.

ஜப்பானில் உள்ள தனேகசிமா என்னும் இடத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் எச்-2 ஏ ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது செவ்வாய் கோளின் காலநிலை மற்றும் பருவநிலைகளை ஆராயும். இந்த விண்கலம் சுமார் 7 மாதப் பயணத்திற்குப்பிறகு செவ்வாய் சுற்று வட்டப் பாதையை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிபுணர்களிடம் பயிற்சி பெற்ற அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை ஆறுமாதத்தில் உருவாக்கி உள்ளனர்.

கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்திலும், துபாயில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலும் இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தங்களது அடுத்த திட்டத்தினை தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் அளவிற்கான ஆற்றல் அமீரகத்திற்கு வந்துவிட்டது என்கிறார் கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்தின் மூத்த பொறியாளர்.

நமது புவியின் காற்று மண்டலத்தில் நீர்வளி என்கிற ஹைட்ரஜன் காற்று கிடையாது. நாம் உற்பத்தி செய்கிற நீர்வளிக் காற்றை வெளியேற்றினால், நமது புவியின் காற்று மண்டலத்தில் உள்ள உயிர்வளியை எடுத்துக் கொண்டு நீரை உருவாக்கி விடும். 

ஆனால் தண்ணீரை உருவாக்கத் தேவையான நீர்வளி, உயிர்வளி இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருக்கும் வியப்பான செய்தி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அது எப்படி சாத்தியமாகிறது என்பது குறித்து  அமீரகத்தின் விண்கலம் ஆய்வு நடத்துவதில் அதிக கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.