04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆவிகளை அழைத்துப் பேசும் கலைஞர் என்று நம்பப்படும் ஸ்டீவ் ஹப் அண்மையில் இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆவியுடன் பேசியதாக தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் என்ற ஹிந்தித் திரையுலக நடிகர் தோனியாக நடித்ததன் மூலம் ஹிந்தி மொழி திரையுலக கொண்டாடிகளிடம் புகழ் பெற்றார். அவர் கேதார்நாத் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சிறிய அகவை என்றாலும் திறமை அதிகம் என்பதால் இவர் பல்வேறு திரை மின்மினிகளுக்கு நடுவே பாராட்டு பெற்றார். இவருக்கு குறுகிய காலத்திலேயே நிறைய கொண்;டாடிகள் கிடைத்தனர். இவரைத் தோனியாகவே பார்த்தவர்கள் ஏராளம். இந்த உச்ச நிலையில் இவர் கடந்த மாதம் தனது மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணம், புகழ், திரை வாய்ப்புகள், திறமை என இத்தனை இருந்தும் சுஷாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அவரது கொண்டாடிகளுக்குப் பேரிடியாக அமைந்துவிட்டது. இவரது உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அவர் கழுத்தில் கயிறு போன்ற ஒரு பொருள் நெரித்தே இறந்தார் என்றும் அவரது மரணம் கொலை அல்ல, தற்கொலைதான் என்றும் கூறப்பட்டது. மேலும் அவரது வீட்டில் தற்கொலைக்கு ஆதாரமான கடிதங்கள் ஏதும் சிக்கவில்லை. இதனால் அவரது கொண்டாடிகள் அவர் ஏன் இறந்தார் என்பது குறித்து தெரிந்து கொள்ள விரும்பினர். இதற்காக ஆவிகளை அழைத்துப் பேசும் கலைஞர் என்று நம்பப்படும் ஸ்டீவ் ஹப்பை மின்அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு சுஷாந்த் ஆவியுடன் பேசுமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து ஸ்டீவும் கடந்த கிழமை சுஷாந்த் ஆவியுடன் பேசி அதற்கான காணொளியையும் வெளியிட்டுள்ளார். சுமார் 11 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தக் காணொளியில் ஆவியுடன் பேசும் கருவியை கொண்டு சுஷாந்த் சிங்கை ஸ்டீவ் தொடர்பு கொள்ள முயற்சித்தார். அப்போது சுஷாந்த் சிங்கை உணர்ந்த ஸ்டீவ், அவர் தனியாக இல்லை என்பதையும் பெண் ஒருவர் வழிகாட்டுவதையும் உணர்ந்தார். இதுகுறித்து ஸ்டீவ் கூறுகையில், இன்று நான் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளேன். சுஷாந்தின் ஆவி என்னுள் வந்ததது மட்டும் அல்லாமல் அதனுடன் நான் நேரடியாக பேசினேன். அவர் தன்னுடன் ஒருவரை அழைத்து வந்தார். இவர் பேசுவதற்கு உதவ யாரோ திறமையானவரும் உடனிருந்தார். இங்கு யாரும் உதவி புரிவோர் இல்லாததால் சுஷாந்தே அழைத்து வந்தார். இந்தக் காணொளியைப் பதிவு செய்யும் போது அந்த அறை முழுவதும் அளவு கடந்த அன்பு நிரம்பியிருந்தது. இன்னும் ஏராளமான கேள்விகளுடன் மீண்டும் ஒருமுறை அவரிடம் பேசுவேன் என்றார் ஸ்டீவ். ஒரு வேளை சுஷாந்துடன் இருக்கும் பெண் அவரது தாயாக இருக்கலாம் என தெரிகிறது. ஸ்டீவ் ஹப் கடந்த 10 ஆண்டுகளாக ஆவிகளுடன் பேசி வருகிறார். இவர் பேட்ரிக் சூயஸ், மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோரின் ஆவிகளுடன் பேசியுள்ளார். ஆவிகளுடன் ஒலியை கேட்க இவர் தனியாக ஒரு கருவியையும் வடிவமைத்துள்ளார். என்றெல்லாம் இவர் குறித்த மிக இயல்பாக செய்திகள் வெளியாகி வருகிறது. சாமி இல்லை என்கிறவர்களை நாத்திகர்கள் என்கிறோம். பேயை மறுப்பவர்கள் என்றும், பேயை மறுப்பவர்களுக்கு இப்படியான தனிப்பெயர் இல்லாமலும், பேய் பாதுகாப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது. சாமியார்கள் போல பேயார்கள் யாரும் இன்னும் எந்த கொட்ட பெயரும் சம்பாதிக்காமல் இருக்கிற நிலையில், ஸ்டீவ் ஹப் போல மிகச்சிலர் புகழ் தளத்தில் இருந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் நாட்டில், மதுரை அருகே உள்ளே விக்கரவாண்டி எனும் ஊரை சேர்ந்த திரு ரவிசந்திரன் ஆவி குறித்து நம்மிடம் அதிகம் பேசிக்கொண்டிருப்பவர். ஆவியுடன் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். இப்பொழுது அவரது மாணவர்கள் நிறைய பேர் ஆவிகளுடன் பேசச் தொடங்கி உள்ளனர். இவர்கள் ஒன்று சேர்ந்து ஆவி ஆராய்ச்சி கழகம் ஒன்றைத் தொடங்கி, தமிழ் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகள் தொடக்கியுள்ளனர். ஆவி குறித்து அவர்களின் புத்தகங்கள் சிலவற்றைப் படிக்கும்போது, ஆவி குறித்து நமது கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மேலும் கேள்விகளை துண்டுகின்றன. ஆவியுடன் பேசவேண்டும் என்று அவர்களிடம் போகிறோம் என்று வைத்துகொள்ளுங்கள், அவர்கள் முதலில் கூறுவது அந்த ஆவி நல்ல ஆவியாக இருக்கவேண்டும் என்று. அந்த ஆவி கெட்ட ஆவி என்று அவர்கள் சொன்னால் அதை நம்பிக்கொண்டு திரும்பிவிட வேண்டும். அடுத்து எல்லா ஆவிகளும் நம்முடன் பேசவேண்டும் என்று எண்ணாது. நீங்கள் தேடிவந்த ஆவி உங்களுடன் பேச விரும்பவில்லை என்றும் அவர்கள் சொல்லலாம். அடுத்து மிக முதன்மையானது, நீங்கள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆவி உங்களுடன் பேசவிரும்புமாம். இந்த நிபந்தனைகள் அவர்களின் மேல் நமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது. இவை எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் சொல்லும் இன்னொன்று சில ஆவிகள் வேண்டுமென்றே தவறான தகவல்களை சொல்லும் என்று. எடுத்துக்காட்டிற்கு நான் ஆவிகளுடன் பேசுவேன் என்று சொல்வதை நம்பி நீங்கள் என்னிடம் வருகிறீர்கள். நான் உங்களிடம் எதையும் சொல்ல விரும்பவில்லை என்றால் அந்த ஆவி கெட்ட ஆவி என்றும் அல்லது அது உங்களிடம் பேசவிரும்பவில்லை என்றும் அல்லது நீங்கள் துய்மையானவர் இல்லை என்றும் சொல்லலாம். ஒருவேளை நான் எதாவது சொல்லி அது உண்மை இல்லை என்றால், அந்த ஆவி வேண்டுமென்றே பொய் சொல்லுகிறது என்றும் சொல்ல முடியும். ஸ்டீவ் ஹப் ஆவியுடன் பேச ஒரு கருவி வடிவமைத்திருப்பதாக சொல்லப்படுவது போல, நம்மவர்கள் பேச வைத்திருக்கும் கருவி சினா இறக்குமதிதான். (மோடிக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்) குழந்தைகள் விளையாட சீனர்கள் பயன்படுத்திய ஒரு விளையாட்டுக் கட்டம்தான் அந்தக் கருவி. அந்த விளையாட்டுக் கட்டத்தின் மீது ஓடுவதற்கு ஒரு மரக்கட்டை உருளை செங்குத்தாக நிற்கவைத்துப் பயன்படுத்தப் படுகிறது. கட்டத்தின் நாலாப்புறமும் சீன எழுத்துக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. தமிழ் எழுத்துக்களை யாராவது பயன்படுத்தவும் தொடங்கியிருக்கலாம். அந்த செங்குத்து மர உருளையின் மேல் ஒருவர் தன் விரலை வைத்து அந்த ஆவியை நினைத்து உணர்வுப்பாடாக வணங்கி வேண்டும் பொழுது அந்த ஆவி, உருளை மீது விரல் வைத்திருக்கும் நபரை ஊடகமாக கொண்டு அந்த உருளையை கட்டத்தின் மீது நகர்த்தும். அப்படி நகர்த்தும் போது உருளை செல்லும் ஒவ்வொரு எழுத்துகளையும் குறித்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒன்று சேர்த்தால் ஆவி சொன்னது புரியும். அந்த ஆவிக்கு எழுத படிக்க தெரியாதிருந்தால்? கேள்விகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். பதில்களும் திறமையாக உருவாக்கப்படும். ஆவிகளுடன் நாமும் பேசலாம் வாங்க.
ஆவிகளை அழைத்துப் பேசும் கலைஞர் என்று நம்பப்படும் ஸ்டீவ் ஹப் அண்மையில் இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆவியுடன் பேசியபோது, ஒரு பெண் ஆவி கூட இருந்ததாகத் தெரிவித்தது தீயாகியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



