Show all

நடுவண் பாஜக அரசுக்கு கிடைத்த சோப்பு- நேபாளஅரசின் வரைபடம்! இந்திய மக்களுக்கு வழங்க வேண்டிய கொரோனா ஒத்துழைப்பை கைக்கழுவ

சோப்பு போட்டு கைக்கழுவுவதால், ஐம்பது விழுக்காட்டு கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று உலகெங்கும் மருத்துவர்கள் தெரிவித்து வரும் செய்தியாகும். இதை வேறுவகையாக எடுத்துக் கொண்டுள்ளது நடுவண் ஆட்சியிலிருக்கும் பாஜக  

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சோப்பு போட்டு கைக்கழுவுவதால், ஐம்பது விழுக்காட்டு கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று உலகெங்கும் மருத்துவர்கள் தெரிவித்து வரும் செய்தியாகும்.  

இதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டோமா? அதை நம்மிடம் புரிய வைப்பதற்கும், நடைமுறைப் படுத்துவதற்கும் நடுவண் அரசு ஏராளமாகச் செய்யலாம். ஆனால் நடுவண் பாஜக அரசு எடுத்துக் கொண்ட சோப்பு இந்தியாவிற்கு தூசுமாதிரியான நேபாளச் சிக்கல். அந்தச் சோப்பை வைத்து இந்திய மக்களுக்கு வழங்க வேண்டிய கொரோனா ஒத்துழைப்பை கைக்கழுவிக் கொண்டிருக்கிறது நடுவண் பாஜக அரசு.

இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. இரு நாடுகளும் உறுதியான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.

இரு நாடுகளும் எல்லையைத் தாண்டி மக்களை சுதந்திரமாக நகர்த்துவதற்கான நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரியமான நட்புறவு தொடர்ந்து வந்தாலும், மெல்ல ஊதினாலே அகன்றுவிடும், கண்ணில் விழுந்த தூசுமாதிரி சின்னதொரு எல்லைச் சிக்கலும் இருந்து வருகிறது. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த முன்னெடுப்பில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் உரசல் போக்கை இருநாட்டு ஆளும் தரப்பும் மக்களுக்கு வழங்க வேண்டிய கொரோனா ஒத்தழைப்பை கழுவுவதற்கு சோப்பாக பயன்படுத்திக் கொள்ளும் உயரிய தந்திரத்தை கொண்டாடி வருகின்றன.

இதற்கு நேபாள அரசு செய்த வேலை- லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை தயாரித்துள்ளதுதான்.

இந்த வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் நேபாள அரசியல் சாசன திருத்த சட்டமுன்வரைவு (சட்டமுன்வரைவு கலாச்சாரம் என்பதே நடுவண் பாஜக அரசின் உயரிய முன்னெடுப்பு என்பது புரியவில்லையா என்ன?) கடந்த சனிக்கிழமை அந்த நாட்டு நாடாளுமன்ற கீழவையில் ஒருமனதாக நிறைவேறியது. 

இதற்கான எதிர்நிலையை- இந்திய நடுவண் பாஜக அரசு ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி கையாள வேண்டிய கட்டாயம் எல்லாம் இல்லை. அந்தப் பகுதியில் இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவை நிறுத்தினாலே நேபாள அரசு அவர்கள் வரைந்த வரை படத்தைக் கிழித்துப் போட்டுவிட்டு துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடிவிடும்.

நேபாளத்திற்கான இந்திய தூதராக பணியாற்றிய தூதர் ரஞ்சித் ரே, “நேபாளத் தலைமைஅமைச்சர் கே.பி. ஷர்மா ஒலி தனது நிலையை பலப்படுத்துவதற்கும் உள்நாட்டு அரசியல் சலசலப்புகளை வெல்வதற்கும் புதிய வரைபடத்துடன் முன்னேற முடிவு செய்துள்ளார்” என்று தெரிவிக்கும் கருத்து இந்த இருநாட்டு ஆளும் தரப்பினர் தங்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய கொரோனா ஒத்துழைப்பிலிருந்து மக்களை கைகழுவுவதற்கான சோப்பாக பயன்படுத்துகின்றனர் என்பதை தெரிவிப்பதாகிறது.

நேபாள அரசின் இந்தப்போக்கு நிலைக்க முடியாது. அந்த நாட்டினரே அதை முடிவுக்குக் கொண்டுவந்து விடுவார்கள் என்பதே உண்மை. 

இந்த வகையாக- நேபாளம் அனைத்து வகையான கட்டாயத் தேவைகளுக்கும் அண்டை நாடுகளை சார்ந்து இருப்பதால் இந்தியாவுடனான உறவை மோசமடைய விடக்கூடாது என நேபாளத்தின் மூத்த பொருளாதார நிபுணர் போஸ் ராஜ் பாண்டே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் “நேபாளஇந்தியா உறவுகளை சேதப்படுத்த அனுமதிக்கக்கூடாது. சிக்கலை விரைவாகத் தீர்க்க ஒரு உரையாடல் தேவை கட்டாயத்தேவைப் பொருட்களுக்காக நேபாளம் இந்தியாவை சார்ந்துள்ளது. நேபாள அரசின் நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்தால், அது நாட்டில் பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.