இந்தியாவில் கொரோனா பாதிப்பு 43 ஆக உயர்வு, கேரளாவில் இருந்து 3 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேற்கொள்ளப்பட்டது பாரம்பரிய மருத்துவமுறையா- அல்லோபதியா: என்ற கேள்வி எழுந்துள்ளது. 26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரித் தொற்று சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. படிப்படியாக உலகம் முழுவதும் பரவிய நிலையில், இப்போதைய நேரத்தில் சீனாவை விட இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் பாதிப்பும், வேகமும் அதிகமாக இருக்கிறது. இத்தாலியில் கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக் காரணமாகக் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 133 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால், நேற்று ஒரே நாளில் இந்தப் பலி எண்ணிக்கை 366 ஆக மாறியது. அதேபோல் இத்தாலியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 7ஆயிரத்து 375 பேர். சீனாவில் 3 ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா நுண்ணுயிரி பாதிப்பால் 3ஆயிரத்து 831 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 22 பேர் பலியாகியுள்ளனர். அதே வேளையில் இந்த நுண்ணயிரித் தொற்றால் பாதிக்கப்பட்டு 62 ஆயிரத்து 356 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்பது ஆறுதலான செய்தி. இறந்தவர்கள் பெரும்பாலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகக் காணப்பட்டவர்கள் அல்லது சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தரவுகள் கூறுகின்றன. இந்தியா நலங்குத்துறை இப்போது வெளியிட்ட அறிவிப்பில் கொரோனா பாதிப்பு 43 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்கள் சென்று வந்த இடங்களில் தொடர்பிலிருந்த மக்கள் அனைவரும் கண்டறியப்பட்டு, அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய நலங்குத்துறை அமைச்சகம் வெளியிட்ட கீச்சுத் தகவலில், “புதிதாக ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், கேரளாவைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. இதில் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்” எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடஇந்திய ஹோலி விழா கொண்டாட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்திய நலங்குத்துறை அமைச்சகம், “வெளிநாடு சென்றுவிட்டு ஊர் திரும்பும் அனைவரும், தங்கள் பயண விவரம் குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த வகை கொரோனா தொற்றை உங்கள் உதவியோடுதான் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு முன்பே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த அமெரிக்க நபர் சுமார், அஸ்ஸாமில் 400க்கும் மேற்பட்டோரிடம் பழகியிருந்தது தெரியவந்துள்ளது. இதுவரை நாட்டில் 3 ஆயிரத்து 3 பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் எனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 2ஆயிரத்து 694 பேருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா பாதிப்பிற்கு ஆளான அறிகுறிகள் காணப்படுகிறது. அதில் 177 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 867 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்டனர். இதுவரை நாட்டில் கொரோனாவால் உயிர்ப் பலி ஏற்படவில்லை. அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பிற்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நிலையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் கேரளாவில் புதிதாக 3 அகவைக் குழந்தை உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



