இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து சரிந்து வருகிறது. மீட்டெடுக்க வேண்டுமானால் சமூக அக்கறையும், பொருளாதார அறிவும் தேவை என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். 26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73.96 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று காலை 74.08 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பாஜக ஆட்சியில் மட்டும் 22 விழுக்காட்டு அளவிற்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. ஏன் இப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வேகமாகச் சரிகிறது என்பதற்குப் பொருளாதார வல்லுனர்கள் சில காரணங்களை முன்வைக்கின்றனர். எல்லாவற்றுக்கம் மேலாக நடுவண் பாஜக அரசு முன்னெடுத்த பணமதிப்பிழப்பு, சரக்கு சேவைவரியால் தொழில் முடக்கம், வணிக வீழ்ச்சி, பொருளாதார மந்தம் ஆகியன இந்தியாவை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. இவற்றோடு கடந்த 50 நாளில் சென்செக்ஸ் சுமாராக 6,400 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. இதனால் சந்தையை நம்பி முதலீடு செய்பவர்கள் கூட, தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என டாலரில் தஞ்சம் புகுந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே டாலர் வலுவடைந்து கொண்டு இருக்கிறது அமெரிக்கா ஒன்றிய வங்கி, தன் வட்டி விழுக்காட்டை 0.5 விழுக்காடு வரை குறைத்து இருக்கிறது. பனிரெண்டு ஆண்டுக்கு முந்தைய பொருளாதார நெருக்கடி காலத்துக்குப் பின் 0.5 விழுக்காடு வட்டி விகிதத்தைக் குறைத்து இருப்பது இதுவே முதல் முறையாம். டாலர் வலுவடைய இது ஒரு மிக முக்கிய காரணமாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்கள் யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் போன்ற கட்டுப்பாடுகள்- இந்திய சந்தைகளில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இதுவும் ரூபாய் மதிப்பு குறைய ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். ஐரோப்பா பங்குச்சந்தைகள் அனைத்துமே சரிவில் தான் நிறைவடைந்து இருக்கின்றன. ஆசியாவின் சந்தைகள் பயங்கர சரிவில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இது முதலீட்டாளர்கள் நடுவே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீண்டும் தங்கள் பணத்தின் பாதுகாப்புக்காக டாலரில் முதலீடு செய்கிறார்கள். டாலர் வலு பெற்றுக் கொண்டி இருக்கிறது. கொரோனா தொற்று உலகம் முழுக்க பரவிக் கொண்டு இருப்பதால், ஒட்டு மொத்த உலக பொருளாதாரமே வளர்ச்சி காண முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது. உலக சந்தைகள் தொடங்கி இந்திய சந்தைகள் வரை, தங்கம் விலை தொடங்கி டாலர் மதிப்பு வரை எல்லாவற்றுக்கும் கொரோனா ஒரு முதன்மைக் காரணமாக இருக்கிறது. கொரோனா கட்டுப்படுத்தப்படுமேயானால் மீண்டும் ஓரளவுக்கு பழைய நிலைக்கு வரலாம் என்று தெரிவிக்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.