நாடுகள் அரசு சாராத நடப்பில் உள்ள எண்ணிமச்செலாவணியை ஒன்றிய பாஜக அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளையில் இவைகளுக்கு மாற்றாக இந்திய ரூபாய் மதிப்பில் புதிய எண்ணிமச்செலாவணி உருவாக்கவும் முடிவு செய்துள்ளது. 23,தை,தமிழ்த்தொடராண்டு-5122: உலகளவில் எண்ணிமச் செலாவணி (கிரிப்டோகரன்சி) வணிகம் மக்கள் நடுவே வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் மூன்றாவது தனித்துவமான ஒரு கொள்கை, அமைப்பு அல்லது நிருவாகம் என்பதாக ஒன்று முளைத்தால் அதிர்ச்சியும் அச்சமும் கொள்கின்றன- தங்களைத் தெளிவான வலதுசாரியாகவோ இடது சாரியாகவோ காட்டிக் கொள்கின்ற நாடுகள். அந்த வகையில் நாடுகள், அரசுகளின் கட்டுப்பாடு இல்லாமல் தனித்துவமான வணிகத்திற்கானதாக விளங்குகிற எண்ணிமச் செலாவணி குறித்து தங்கள் தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன சில நாடுகள். இதனால், ஒவ்வொரு நாட்டின் அரசே தனது நாணய மதிப்பின் அடிப்படையாகக் கொண்டு ஒரு எண்ணிமச் செலாவணியை உருவாக்கினால் பாதுகாப்புடன், பரிமாற்றங்களைக் கண்காணிக்கவும் முடியும் எனக் கருத்தைப் பரப்பி வருகின்றன. இதன் அடிப்படையில் அமெரிக்காவில் பல முன்னணி நிறுவனங்கள் வங்கி மற்றும் அரசு அமைப்புகள் இணைந்து புதிதாக எண்ணிமச்செலாவணியை (கிரிப்டோகரன்சியை) உருவாக்கும் பணியில் மிகவும் கமுக்கமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டு வருகிறது. இதுவரை நடுநிலைக் கொள்கையில் இயங்கி வந்திருந்த இந்தியாவைத் தெளிவான வலதுசாரி நாடாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிற ஒன்றிய பாஜக அரசுக்கும் நடப்பில் உள்ள எண்ணிமச் செலாவணிகள் மீது நம்பிக்கையில்லை. அதனால் புதிதாக எண்ணிமச் செலாவணியை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது. எண்ணிமச்செலாவணி குறித்து இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் ஒரு முதன்மைக் குழு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் எண்ணிமச் செலாவணி குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் துணை ஆளுநரான பி.பி.கனுங்கோ இன்று நடந்து முடிந்த கட்டுப்பாட்டு வங்கியின் இருமாத செலாவணிக் கொள்கை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். இன்று கட்டுப்பாட்டு வங்கியின் துணை ஆளுநர் பி.பி.கனுங்கோ கூறியதன் மூலம் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி எண்ணிமச் செலாவணி உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. நாடுகள் அரசு சாராத நடப்பில் உள்ள எண்ணிமச்செலாவணியை ஒன்றிய பாஜக அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளையில் இவைகளுக்கு மாற்றாக இந்திய ரூபாய் மதிப்பில் புதிய எண்ணிமச்செலாவணி உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.