இந்திய விடுதலைக்கு முன்பு இந்திய ரூபாயின் மதிப்பும், அமெரிக்க டாலரின் மதிப்பும் ஒரே மதிப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பின் இன்று வரை ஆட்சியாளர்கள், தொடர்ந்து வெளிநாடுகளில் கடன் வாங்கி, இந்திய ரூபாய் மதிப்பை தொடர்ந்து வீழ்ச்சியுறச் செய்து கொண்டிருக்கிறார்கள். 23,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய விடுதலைக்கு முன்பு இந்திய ரூபாயின் மதிப்பும், அமெரிக்க டாலரின் மதிப்பும் ஒரே மதிப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் அப்போது இந்தியாவிற்கு கடன் எல்லாம் இல்லை. உற்பத்தி நிருவாகத்தில் தொழிலோ வணிகமோ செய்து ஒருவர் நிறைய இழந்திருப்பார். அப்போது அவர் நினைப்பார்- நாம் சும்மா இருந்து கொண்டு கடன்வாங்கி சாப்பிட்டு வந்திருந்தால் கூட இவ்வளவு இழந்திருக்க மாட்டோமோ என்று. ஆனால் அது உண்மையல்ல என்பதுதாம் இந்திய ஆட்சியாளர்கள் நமக்கு உணர்த்தும் பாடம். இந்தியாவை ஆண்ட காங்கிரசும் சரி, இன்று ஆண்டு கொண்டிருக்கிற பாஜகவும் சரி மறுஉற்பத்தி சாராத வரி- மற்றும் உற்பத்தித் துறைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு பற்றாக்குறைகளுக்குக் கடன்- என்பதாக கடன் நிருவாகம் மட்டுமே செய்து வருகின்றன. விடுதலைக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிந்திதாம் இந்தியா வெளி நாடுகளில் இருந்து கடன் வாங்கத் தொடங்கியது. அப்போதே இந்திய ரூபாயின் மதிப்பும் வலுவிழக்கத் தொடங்கியது. இந்தியாவின் கடன் கூடுதல் ஆக ஆக ரூபாயின் மதிப்பும் அதல பாதாளம் நோக்கி சென்று கொண்டுள்ளது. இந்திய விடுதலை பெற்ற காலக்கட்டத்தில், 1 டாலரின் மதிப்பு 4.16 ரூபாயாக இருந்த நிலையில், நாற்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 8 ரூபாயினைத் தொட்டது. அதுவரையில் அதே விழுக்காட்டில் தான் இருந்தது. இதே முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 10.1 ரூபாயினை தொட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் வெறும் 20 ரூபாய்க்குள்ளேயே தான் இருந்துள்ளது. அதன் பிறகு தான் ஆண்டுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என இந்திய ரூபாய் மதிப்பு சரிய தொடங்கியது. கடந்த ஆண்டில் ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டது. ஏனெனில் கச்சா எண்ணெய் இறக்குமதி, எண்ணெய் விலை அதிகரிப்பு, அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேற்றம், அரசின் கடன் விகிதம் அதிகரிப்பு, பணவீக்க விகிதம், இறக்குமதி அதிகம், கொரோனா ஊரடங்கு என பல காரணங்களினால் வீழ்ச்சி கண்டுள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதால், விலைவாசி அதிகரிக்கும். இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், மற்ற அடிப்படை தேவைகளின் விலையும் அதிகரிக்கும். டாலரில் செலுத்த வேண்டிய செலவினங்களுக்கு அதிக ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். கல்வி கற்பதற்கான செலவு மற்றும் வெளிநாட்டு பயண செலவுகள் என பலவும் அதிகரிக்கும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.