ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கையை ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 24,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒரேநாடு, ஒரேஆதார், ஒரேமதம், ஒரேகுடும்ப அட்டை என்று உதிரிகளை ஒழித்துக்கட்டும் கொள்கைப்பாட்டில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து முனைந்து வருகிறது. அவற்றுள் ஒரேகட்சி, ஒரேகார்ப்பரேட் என்பவைகளும் உள்ளடக்கம். இந்தியாவில் மிகப் பெரிய துறையாகவும், அதிகாரிகளுக்கும், அரசுக்கும், வருமானம் கொழிக்கும் துறையாகவும் இருந்து வருகிறது சாலைப் போக்குவரத்துத் துறை. அத்துடன் பற்பல உதிரி ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கும் இந்தத் துறையால் வாழ்மான வருமானம் கிடைத்து வருகிறது. இந்த உதிரி ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள்தாம் பாஜகவிற்கு கண் உறுத்தல் ஆக இருக்கிறது. அவைகள் அனைத்தையும் ஒரே கார்ப்பரேட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியில்- ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கையை ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மக்களுக்கு தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக, ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் கொண்டு வர மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தேசிக்கிறது என்று அந்த ஒற்றைக் கார்ப்பரேட் மயமாக்கலுக்கு காரணம் கற்பிக்கப்படுகிறது. ஆனால், இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிக்கும் ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது, ஓட்டுநர் பரிசோதனையில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுமாம். அதாவது கார்ப்பரேட்டுக்கே முழுஅதிகாரம். மேலும் இந்த நடவடிக்கை, போக்குவரத்துத் துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைக்க உதவும். இது அவர்களின் திறனை அதிகரிப்பதோடு, சாலை விபத்துக்களையும் குறைக்கும் என்றும் காரணம் சொல்லப்படுகிறது. பொது மக்களிடம் இருந்து ஆலோசனை பெறுவதற்காக என்று, இந்த வரைவு அறிவிப்பு- சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆலோசனைகள் பெற்ற பின்பு இது முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.