Show all

தீயாகிவரும் பதிவு! தமிழ்நாட்டின் முடிவை பாராட்டிய உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர்

தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டு வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவிற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டு வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவிற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரும் இதை பாராட்டி உள்ளார். 

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தமிழ்நாட்டு முதல்வருக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்கும். தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், முன்னாள் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி இயக்குனர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் முனைவர் எஸ் நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழ்நாட்டின் முடிவை பல்வேறு பொருளாதார வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர்களும், மேதைகளும் பாராட்டி வருகிறார்கள். தமிழ்நாடு துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. உலகம் முழுக்க உள்ள பெரிய பொருளாதார வல்லுநர்களை ஒன்றாக இணைப்பதே கடினம், அவர்களை வைத்து குழுவை உருவாக்குவது எல்லாம் மிகப்பெரிய சாதனை என்று பாராட்டி வருகிறார்கள். 

இதை உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரும், பொருளாதார ஆலோசகருமான கவுசிக் பாசு பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள கீச்சுவில் தமிழ்நாடு அரசு அமைத்து இருக்கும் புதிய பொருளாதார ஆலோசகர்களின் குழு மிக சிறப்பானதாக உள்ளது. தீவிரமான பொருளாதார வல்லுநர்கள் இதில் உள்ளனர். தனித்துவம் கொண்ட வல்லுனர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எல்லோரும் தங்கள் மனதில் தலைவரிடம் வெளிப்படையாக பேச கூடியவர். தலைவரின் கொள்கையில் உடன்படவில்லை என்றால் அதை வெளிப்படையாக தெரிவிக்க கூடியவர்கள். இவர்களை வைத்து ஆலோசனை குழு அமைக்கவே மிகப்பெரிய தைரியம் வேண்டும். வாழ்த்துக்கள். இது புதிய வளர்ச்சியை கொடுக்கும் என்று நம்புவோம். இது சிறப்பான செய்தி. 

இந்த வேலையை ஒன்றிய அரசும் இதேபோல் முன்னெடுத்து இந்த அறிஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருந்தால், இந்தியாவின் பொருளாதாரம் தற்போது இருக்கும் நிலைக்கு பதிலாக நல்ல நிலையை எட்டி இருக்கும், என்று கவுசிக் பாசு குறிப்பிட்டுள்ளார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.