ஆளுநர் என்பவர் மாநிலத்தின் குரலாக ஒன்றியத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டியவர் இதுதான் இந்திய அரசியலமைப்பு தெரிவிக்கிற சட்டம். தொடக்க காலத் திமுக ஆட்சியில் ஆளுநரின் பேச்சு நடவடிக்கைகளில் இது நிகழும். அதைக் கண்டு வியந்து போவார்கள் காங்கிரசின் வடஇந்தியத் தலைவர்கள். 08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆளுநர் என்பவர் மாநிலத்தின் குரலாக ஒன்றியத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டியவர் இதுதான் இந்திய அரசியலமைப்பு தெரிவிக்கிற சட்டம். தொடக்க காலத் திமுக ஆட்சியில் ஆளுநரின் பேச்சு நடவடிக்கைகளில் இது நிகழும். அதைக் கண்டு வியந்து போவார்கள் காங்கிரசின் வடஇந்தியத் தலைவர்கள். ஆளுநர் கே.கே.சா அவர்களுக்கு தமிழ் கற்றுத்தந்த திமுக அரசு என்பதெல்லாம் இன்றையப் பெருசுகளின் மலரும் நினைவுகள். அப்புறம் ஆளுநர்களை இன்று வரை, இந்தியாவின் எந்த மூலையிலும் அப்படிப் பார்க்க முடியவில்லை. ஒன்றியத்தின் ஒற்றர்களாகவே ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றார்கள். அதிலும் பாண்டிச்சேரியின் ஆளுநராக இருந்த கிரண்பேடி மிகவும் உச்சம். இதே தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தின் அதிமுக ஆட்சி காலத்து பேச்சும் நடவடிக்கையும் வேறு. ஆனால் இன்றைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தின் பேச்சும் நடவடிக்கையும் பெருசுகளை வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கிறது. பெரியாரின் சமூக நீதி பாதை, அண்ணாவின் பொன் மொழி, அட ஆளுநர் புரோகித்தா இப்படி? என்று வியந்து பாராட்டி வருகின்றனர் கடந்த இரண்டு நாட்களாகத் தமிழகப் பெருசுகள். தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் நேற்று தனது உரையில் பெரியார் மற்றும் அண்ணா குறித்து பேசியது பெரிய வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் 16வது கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை ஆளுநர் புரோகித் நேற்று சட்டமன்றத்தில் அறிவித்தார். இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களை பாராட்டியும் அவர் பேசினார். இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் தனது உரையில் அண்ணா மற்றும் பெரியார் குறித்தும் பேசி உள்ளார். அவர் பேசியதாவது, ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது அண்ணாவின் பொன்மொழி. அண்ணாவின் மொழிக்கு ஏற்ப தமிழ்நாடு திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமத்துவத்தையும், சமூக நீதியையும் மையமாக வைத்து இந்த தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. தந்தை பெரியார் காண விரும்பிய சமூக நீதி மற்றும் சுயமரியாதைதான் தமிழ்நாட்டின் கொள்கை. சம வாய்ப்பு கொண்டு சமூகமாக தமிழ் நாட்டை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து உரிமைகளும் கொண்டவர்களாக மக்களை மாற்றவும், எல்லா வளமும் அடங்கிய மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, என்று ஆளுநர் புரோகித் தனது உரையில் அரசை பாராட்டி, புகழ்ந்து பேசி உள்ளார். அரசின் திட்டங்களை பாராட்டி, ஆளுநர் பேசுவது வழக்கம்தான். சமயங்களில் லேசான விமர்சனங்களையும் ஆளுநர் தனது உரையில் வைக்கும் வழக்கம் உண்டு. ஆனால் நேற்று ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பேசியது அரசை பற்றிய புகழுரை என்பதை தாண்டி, அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டின் திராவிட கருத்துக்களை புகழ்ந்து உரைக்கும் விதமாக அமைந்தது. முன்னாள் ஆர்எஸ்எஸ் நிர்வாகி, பாஜககாரர் என்று பல்வேறு அடையாளங்களை கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு முந்தைய ஆட்சியில் கூட திராவிட கொள்கைகள் குறித்து இப்படி பேசியது இல்லை. ஆனால் இந்த முறை பெரியார், அண்ணா என்று திராவிட ஆணிவேர்களை புகழ்ந்து பேசியது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. அரசும் ஆளுநரும் இணக்கமாக செல்ல தொடங்கி இருப்பதையே இது காட்டுகிறது. முதன்மையாக கொரோனா நிவாரண நிதியாக ஆளுநர் 1 கோடி ரூபாயை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்ததில் இருந்தே, ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் கொஞ்சம் சுமுகமான உறவே நீடிக்கிறது. மாநில உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், எந்த மோதலும் இன்றி ஆக்கப்பாடான அரசியல் செய்யவும் கண்டிப்பாக இது வழிவகுக்கும்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.