ஆசியாவில் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்திருந்த கவுதம் அதானி தற்போது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார் 07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி இருந்த மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை ஒன்றியப் பத்திரவைப்பு நிறுவனம் முடக்கியுள்ளது. இதன் காரணமாக அதானி பங்குகள் வீழ்ச்சி அடைந்து கௌதம் அதானிக்கு நான்கு நாட்களுக்குள் 95 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிகர சொத்து மதிப்பில் இருந்து தற்போது 4.63 லட்சம் கோடியாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதானியின் பங்குகள் கடந்த ஒரு கிழமையாக வரலாறு காணாத வகையில் அன்றாடம் ஐந்து விழுக்காடு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அதானி பங்குகளில் முதலீடு செய்தவர்களும் கடுமையாகப் பாதிக்கபட்டிருக்கின்றனர். இன்னும் எத்தனை நாட்கள்தாம் இப்படி அதானி பங்குகள் வீழ்ச்சியடையும் என்ற கேள்வியோடு செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். கடந்த நான்கு கிழமைகளாக அதானியின் பங்குகள் உயர்ந்து கொண்டே வந்த நிலையில், ஆசியாவில் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்திருந்தார் கவுதம் அதானி. ஆனால் கடந்த கிழமை தொடங்கி இன்று வரை அவரின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து வருவதால் தற்போது அவர் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். தற்போது உலகில் உள்ள பல நாடுகளில் நாளுக்கு நாள் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் பணக்காரர் என்றால் அம்பானி குடும்பம் மட்டுமே. அம்பானி குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ நிறுவனமானது மற்ற எல்லா நிறுவனத்தை விட முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதத்தில், ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்திருந்த கௌதம் அதானி தற்போது அந்த இடத்தை இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மேலும் 5 லட்சம் கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்புடன் சீனாவின் யுவான் சான்சான், தான் இழந்த இரண்டாவது இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். இதனால் நான்கு கிழமைக்கு மேலாக அதானியால் இரண்டாவது இடத்தை தக்கவைத்து நிற்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.