Show all

இலங்கையின் மீது இணையவழித் தாக்குதல்! ‘தமிழீழம் சுழியம் வலிமை’ அமைப்பால் முன்னெடுக்கப் பட்டதாகத் தெரிவிக்கிறது இலங்கை அரசு

இலங்கையின் அரசு இணையதளங்கள் சிலவற்றின் மீது நேற்று சுழியம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இலங்கை விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இலங்கையின் அரசு இணையதளங்கள் சிலவற்றின் மீது நேற்று சுழியம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இலங்கை விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீதே இந்த சுழியம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படும் ‘தமிழீழம் சுழியம் வலிமை’ என அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு குழுவினரால் இந்த சுழியம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இலங்கை விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

சுழியம் தாக்குதலுக்கு உள்ளான இணையப் பக்கத்தில் விடுதலைப் புலிகளின் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தக் குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், என்றும் இலங்கை விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலட்சக் கணக்கில், தமிழீழ மக்கள், சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட மே 18 அன்று இவ்வாறான சுழியம் தாக்குதல்கள் நடத்தப்படுவது வழக்கமான முன்னெடுப்பாக உள்ளது. இந்த ஆண்டும் மே மாதம் 18ல் இலங்கையின் ஐந்து இணையதளங்களை இலக்கு வைத்து சுழியம் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

பேரறிமுக செய்தி நிறுவனமொன்றின் இணையத்தளம், வெளிநாட்டு தூதுவராலயமொன்றின் இணையதளம் உள்ளிட்ட இணையதளங்கள் மீதே சுழியம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்வாறான பின்னணியில். நேற்று இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு இணையதளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சுழியம் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த இணையதளங்கள் மீது சுழியம் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், அந்த இணையதளத்தின் ஊடாக எந்தவொரு தகவல்களுக்கோ அல்லது தரவுகளுக்கோ சேதம் விளைவிக்கப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.