Show all

தமிழகத்திற்கான பெருஞ்சோகம்! தமிழகத்திற்கு அழைத்து வரப்படுகிறவர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்றுடன் வருவது

தமிழகத்தில் சிறப்பு விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 89 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 15 பேரும், தொடர்வண்டி மூலம் வந்த 195 பேரும், சாலை வழியாக வந்த 1,176 பேரும் என மொத்தம் 1,475 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் சிறப்பு விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 89 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 15 பேரும், தொடர்வண்டி மூலம் வந்த 195 பேரும், சாலை வழியாக வந்த 1,176 பேரும் என மொத்தம் 1,475 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில், யார் எவர் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பது போல இல்லாமல், மற்ற மற்ற மாநிலங்களில், மற்ற நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களை அப்படி அப்படியே கொத்து கொத்தாக விட்டு விடுகின்றனரா என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள், மற்ற நாடுகளில் இருப்பவர்கள் ஆன தமிழகத்தினர்களை கொரோனா பாதிப்பின் தொடக்கத்திலேயே அழைத்துக் கொள்வதற்கு சிந்தித்திருக்கவில்லையோ என்ற ஆதங்கமும் எழுகிறது. துருவி விசாரித்தால் நடுவண் அரசின் பொறுப்பின்மை உள்ளீடாக இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.  

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக விரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 938 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருகிறவர்களில் பலர் கொரோனா தொற்றுடன் வருவது கண்டறியப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 79 பேரும், குவைத் நாட்டில் இருந்து வந்த 3 பேரும் அடங்குவர்

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே நமக்கான ஆறுதல். அதே நேரத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்வது தமிழகத்திற்கான சோகம். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 160 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து நலங்குத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 856 பேர் மற்றும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 82 பேர் என மொத்தம் 938 பேருக்கு ஒரே நாளில் புதிதாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக மருத்துவமனைகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்றைய நிலவரப்படி 9 ஆயிரத்து 21 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 687 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 12 ஆயிரம் பேர்கள் குணமடைந்து உள்ளனர். தமிழக மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் 6 ஆயிரத்து 513 பேர்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் 70, 69, 58 அகவை ஆண்கள் மற்றும் 72 அகவை பெண் என 5 பேர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் உயிரிழந்தனர். 54 அகவை ஆணும், 37 அகவை பெண்ணும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனாவால் 938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் சென்னையை சேர்ந்த 616 பேரும், செங்கல்பட்டை சேர்ந்த 94 பேரும், சேலத்தில் 37 பேரும், திருவள்ளூரில் 28 பேரும், காஞ்சீபுரத்தில் 22 பேரும், தூத்துக்குடியில் 17 பேரும், ராமநாதபுரத்தில் 13 பேரும், மதுரையில் 10 பேரும், திருவண்ணாமலையில் 9 பேரும், நெல்லையில் 7 பேரும், கடலூர், நாகப்பட்டினம், திருச்சியில் தலா 5 பேரும், திருவாரூர், கன்னியாகுமரியில் தலா 4 பேரும், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், விழுப்புரத்தில் தலா 2 பேரும், விருதுநகர், திருப்பத்தூர், தேனி, தென்காசி, சிவகங்கை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 12 அகவைக்கு உட்பட்ட 1,239 குழந்தைகளும், 60 அகவைக்கு மேற்பட்ட 1,915 பேர்களும் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சிறப்பு விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 89 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 15 பேரும், ரெயில் மூலம் வந்த 195 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,176 பேரும் என மொத்தம் 1,475 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதுவரை தமிழகத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 155 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.