Show all

2வது அலையை இந்தியா தடுக்கத் தவறியது ஏன்? எப்படி? விவாதிக்கிறது உலகம். காரணம்: கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்

கொரோனா பாதிப்பில் இந்தியா எட்டிவிட்ட முதலிடம் காரணம் பற்றி- கொரோனா இரண்டாவது அலையை இந்தியா தடுக்கத் தவறியது ஏன்? எப்படி? விவாதிக்கிறது உலகம்.

07,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா பாதிப்பில் இந்தியா எட்டிவிட்ட முதலிடம் காரணம் பற்றி- கொரோனா இரண்டாவது அலையை இந்தியா தடுக்கத் தவறியது ஏன்? எப்படி? விவாதிக்கிறது உலகம்.

இந்தியா கொரோனா பெருந்தொற்றின் இறுதி கட்டத்தில் இருக்கிறது என கடந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவின் நலங்குத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருந்தார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது, அமைச்சர் ஹர்ஷவர்தனின் உற்சாகம் மிகுந்த நம்பிக்கை பேச்சுக்களுக்கு அடிப்படையாக இருந்தது. 

கடந்த ஆண்டின் கடைசி காலகட்டத்திலிருந்து கொரோனா நுண்நச்சை வெற்றிகொள்ளும், இந்த உற்சாக மனநிலை பரவலாக உருவாகிக் கொண்டிருந்தது.

அரசியல்வாதிகள், சமூகஆர்வலர்கள், ஊடகத்தின் ஒரு பகுதியினர் என பல தரப்பினரும் இந்தியா உண்மையிலேயே கொரோனாவை வெற்றி கொண்டு விட்டதாகக் கருதினார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை அறிவித்தது. அவற்றில் உள்ள 824 சட்டமன்ற தொகுதிகளுக்கான அத்தேர்தலில் சுமார் 18.6 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தார்கள்.

இந்தத் தேர்தல் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு மேல் நடக்கும் எனக் கூறப்பட்டது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக அம்மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

எந்தவித பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சமூக இடைவெளி போன்றவைகள் கடைபிடிக்கப்படாமல் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் கருத்துப்பரப்புதல் பணிகள் முழு வீச்சில் நடந்தன.

கடந்த மாத நடுவில் குஜராத்தில் புதிதாக கட்டப்பட்ட நரேந்திர மோதி துடுப்பாட்டத்திடலில் நடந்த, இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பன்னாட்டுப் போட்டியை காண, சுமார் 1.30 லட்சம் துடுப்பாட்டக் கொண்டாடிகளுக்கு அனுமதி வழங்கியது துடுப்பாட்ட வாரியம்.

அதன் பிறகு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குள் கொரோனா நுண்நச்சுப் பரவல் மீண்டும் கட்டவிழத் தொடங்கியது. இந்தியா கொரோனா நுண்நச்சுப் பரவல் இரண்டாம் அலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு நகரங்களில் புதிய ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

தற்போது சரியாக நாளொன்றுக்கு 1 லட்சத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரத்தொடங்கினார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரே நாளில் 2.70 லட்சத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1,600 பேர் இறந்திருக்கிறார்கள். இத்தனை அதிக எண்ணிக்கையில் கொரோனா பரவுவது மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பது இதுவே முதல் முறை.

கொரோனா பரவல் மற்றும் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் இது ஒரு புதிய உச்சம். இப்போது கொரோனா பரவலை கவனிக்கவில்லை எனில் அடுத்த இரு மாதங்களில், நாள் ஒன்றுக்கு 2,300 பேர் கொரோனாவால் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக, தி லேன்செட் மருத்துவ இதழ் அறிக்கை கூறுகிறது.

தற்போது இந்தியா பொது நலங்கு, அவசரகாலத்தின் பிடியில் இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தவர்களுக்காக அவரது உறவினர்கள் வெளியே நின்று அழுது கொண்டிருப்பது, மூச்சுத்திணறலோடு போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளோடு ஒரு நீண்ட வரிசையில் நிற்கும் சடுதிவண்டிகள், நிரம்பி வழியும் பிணவறைகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் இருவர் ஒரே படுக்கையில் கிடத்தப்பட்டிருப்பது, என சமூக வலைதளம் முழுக்க காணொளிக் காட்சிகள் நிரம்பி வழிகின்றன.

படுக்கைகள், மருந்துகள், உயிர்வளிக்காற்று கட்டாயத்தேவைகள் மருந்துகள் மற்றும் பரிசோதனை வசதிகளுக்கு உதவி வேண்டும் என பலரும் கேட்பதைப் பார்க்க முடிகிறது.

கொரோனா தொடர்பான மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன, கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டால் அதற்கான முடிவுகளை தெரிந்து கொள்ள சில நாட்கள் ஆகின்றன.

இந்தியாவின் மிகப் பெரிய தடுப்பூசித் திட்டம் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பான சிக்கல்கள் எழுந்தது. இருப்பினும் அதை எல்லாம் தாண்டி, கடந்த கிழமை வரை இந்தியா பத்து கோடி பேருக்கு தடுப்பூசியை செலுத்தி இருக்கிறது. தற்போது கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

உற்பத்திக் கொள்ளளவை அதிகப்படுத்த போதுமான பணம் தன்னிடம் இல்லை எனவும், ஆகையால் அடுத்தடுத்த மாதங்களில் தன் உற்பத்தியை அதிகரிக்க இயலாது எனவும், உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா கூறியுள்ளது.

ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனிகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தற்காலிக தடை விதித்திருக்கிறது ஒன்றிய அரசு. இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசிக்கு தேவை இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் வெளி நாட்டில் இருந்தும் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது அதிகரித்து வரும் உயிர்வளிக் காற்று உருளைகள் தேவையை சமாளிக்க, இறக்குமதி செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அன்றாடம் மாலை இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் கருத்துப் பரப்புதல்களின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் தலைவர்களைப் பின் தொடர்கின்றனர். மேலும் கும்பவிழாவில் இலட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்பிற்கும் உள்ளாகி வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலைப் பாட்டினில் அரசு தவறு செய்துவிட்டது போலத் தெரிவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7 மடங்கு அதிகரித்து இருப்பதையும், அப்படி பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரித்த மாதிரிகளை, வெளி நாடுகளில் காணப்படும் கொரோனா திரிபு இருக்கிறதா என்பதை காண மரபணு வரிசைமுறை சோதனைக்கு அனுப்பி இருப்பதையும், தபுசம் பர்னாகர்வாலா என்கிற இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் இதழியலாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த கொரோனா பரவலுக்கு என்ன காரணம் என எங்களுக்கு உண்மையாகவே தெரியவில்லை. இதில் நாங்கள் அதிகம் கவலைப்படும் ஒரு பாடு என்னவெனில் தற்போது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி பாதிக்கப்படுவது இதுவரை காணப்படாத ஒன்று என மகாராஷ்டிரா மாநிலத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் மருத்துவர் சியாம் சுந்தர் நிகம் தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார்.

இந்தியாவில் இளைஞர்கள் அதிகம், இந்தியர்களுக்கு என்றே சிறப்பான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கின்றது, இந்தியா கொரோனாவை வென்று விட்டது என பேசி வந்தது அனைத்தும் முதிர்ச்சியற்றவை என்பது நிரூபணமாகி இருக்கிறது என்றும், பொதுவாக இந்தியாவில் நிலவும் அதிகாரிகளின் ஆணவம், மிகைப்படுத்தப்பட்ட தேசியவாதம், அதிகாரமட்டத்தில் இருப்பவர்களின் இயலாமை போன்ற அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது, என கூறுகிறார் ப்ளூம்பெர்க்கின் கட்டுரையாளர் மிஹிர் சர்மா.

இந்தியாவில் கொரோனா நுண்நச்சுப் பரவல் இரண்டாம் அலை வருவதற்கு முதன்மைக் காரணமே மக்கள் எச்சரிக்கையாக இருப்பதை விட்டு விட்டு, திருமணம் போன்ற சமூக கூட்டங்களில் கலந்து கொண்டது தான்;. அரசு தன் பங்குக்கு தேர்தல் கருத்துப்பரப்பதல்களுக்கு அனுமதி கொடுத்தது மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி கொடுத்து போன்றவைகளைக் கூறலாம்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்த போது குறைந்த அளவிலேயே மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். அதுவே இந்தியாவின் ஒட்டுமொத்த தடுப்பூசி திட்டத்தின் வேகத்தைக் குறைத்தது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போதே கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் புள்ளியியல் நிபுணர் பிரமார் முகர்ஜி இரண்டு மாதங்களுக்கு முன்பே கீச்சுவில் குறிப்பிட்டிருந்தார். அதை யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

‘கொரோனாவின் இரண்டாவது அலை என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அதை இந்தியா ஒத்திப் போட்டிருக்கலாம் அல்லது தாமதப்படுத்தி இருக்கலாம். அதன் தாக்கத்தைக் குறைத்திருக்கலாம்’ என்கிறார் இயற்பியல் மற்றும் உயிரியல் பேராசிரியர் கௌதம் மேனன். பல நாடுகள் மேற்கொண்டதைப் போல, எந்த கொரோனா திரிபால் பாதிக்கப்படுகிறார்கள் என, இந்தியாவும் கடந்த மூன்று மாதங்களாகவே மரபணு வரிசைமுறையைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்க வேண்டும் என்கிறார்.

இந்த பொது சுகாதார நெருக்கடியில் நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன? முன்கூட்டியே கொரோனாவை வெற்றி கொண்டதாக அறிவிக்கக் கூடாது என்பதை இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தவிர்க்க முடியாமல், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரோனா பரவும் போது, சிறிய மற்றும் உள்ளூர் அளவில் விதிக்கப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள மக்கள் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னும் நிறைய அலைகள் வரும் என்கிறார்கள் தொற்று நோயியல் நிபுணர்கள். அதோடு இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விழுக்காடும் குறைவாகவே இருக்கிறது எனக் கூறுகிறார்கள் தொற்றுநோயியல் நிபுணர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.