Show all

ஏன்! 60மணி நேரம் 3216கிமீ தூரம் வியட்நாமில் டிரம்பைச் சந்திக்க வட கொரிய அதிபரின் தொடர்வண்டியிலேயே பயணம்

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவிவந்தது. வடகொரியா மேற்கொண்ட சக்திவாய்ந்த அணு ஆயுதச் சோதனை, மொத்த உலகத்தையும் வியக்கவைத்தது. இந்த அணு ஆயுதச் சோதனையை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா பல முறை எச்சரிக்கை விடுத்தும், வட கொரியா தன் சோதனைகளைத் தொடர்ந்து நடத்திவந்தது. இதனால், வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. 

இதையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே வார்த்தைப் போர் நிலவியது. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்க முடிவுசெய்து, கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதன் முதலாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இவர்களின் சந்திப்பு வரலாற்று முதன்மைத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. 

ட்ரம்ப் உடனான சந்திப்புக்குப் பிறகு, தான் நடத்திவந்த அணு ஆயுதச் சோதனையை கைவிடுவதாக வடகொரியா அறிவித்தது. பிறகு, இரு நாட்டுத் தலைவர்களும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக நட்பு பாராட்டி வருகின்றனர். முன்னதாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அமெரிக்க அதிபரும், வடகொரிய அதிபரும் இரண்டாவது முறையாக நேரில் சந்திக்க உள்ளனர்.

இவர்களின் சந்திப்பு, இன்று மற்றும் நாளை இரு நாட்களும் வியட்நாமில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி, இன்று மாலை 6:30 மணிக்கு இரு நாட்டுத் தலைவர்களும் தனியாக நேரில் சந்தித்துப் பேச உள்ளனர். பிறகு, இரவு நடக்கும் விருந்தில் தங்கள் அதிகாரிகளுடன் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலை நடக்கும் சந்திப்புக்கு இரு தலைவர்களும் இன்று அதிகாலை வியட்நாம் வந்து சேர்ந்துவிட்டனர். இவர்களின் சந்திப்பினால் வியட்நாம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.

அதிபர் கிம் ஜாங் உன், இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வடகொரியாவில் இருந்து தொடர்வண்டியில் பயணித்து வியட்நாம் வந்துள்ளார் என்பதுதான் சிறப்புச் செய்தி. 

சுமார் 3218 கி.மீ தூரத்தை 60 மணி நேரங்களில் கடந்து, இன்று அதிகாலை வியட்நாம் வந்தடைந்துள்ளார் அதிபர் கிம். இந்த தொடர் வண்டி பயணத்துக்குப் பின்னால், பல காரணங்களும் குடும்ப வழக்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் மற்றும் அவரின் தாத்தா கிம் இல் சூங் ஆகிய இருவருக்கும் விமானத்தில் பயணிக்க அதிக பயமாம். இதன் காரணமாக அவர்கள் அதிகமாக தொடர்வண்டியிலேயே பயணம் செய்துள்ளனர். இது அப்படியே குடும்ப வழக்கமாக மாற, அதன் பின்னர் வடகொரியாவை ஆட்சி செய்த தலைவர்களும் தொடர்வண்டி பயணத்தையே தலைமைத்துவமாக மேற்கொண்டுள்ளனர். இவற்றின் காரணமாகவே தற்போது கிம் ஜாங் உன்னும் தொடர்வண்டி பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று வியட்நாம் வந்துள்ள கிம் பயணித்த தொடர்வண்டி, மிகவும் தனித்துவமாக பல சிறப்பு அம்சங்களைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்வண்டியில் உள்ள 21 பெட்டிகள், குண்டு துளைக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள இருக்கைகள் தனித்துவமான தோலில் தயாரிக்கப்பட்டவை. மிடுக்கான படுக்கை அறை, கழிவறை, சிறப்பு ஆலோசனைக் கூடம் ஆகியவை இந்தத் தொடர்வண்டியில் உள்ளன. விமானத்தை விடவும் பல மடங்கு சொகுசாக இந்தத் தொடர்வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது. கிம் வந்த தொடர்வண்டியுடன் மேலும் இரண்டு தொடர்வண்டிகள்  பயணித்துள்ளன. அவற்றில் கிம் ஜாங் உன்னின் மொத்த பரிவாரங்களும் வந்துள்ளனர். ஒரு தொடர்வண்டி, கிம் சென்ற தொடர்வண்டிக்கு முன்பாகச் சென்று தண்டவாளத்தின் தன்மை மற்றும் அதிபரின் பாதுகாப்பை முன்கூட்டியே உறுதிசெய்தது. மற்றொரு தொடர்வண்டி அதிபரின் பாதுகாப்புப் படைகளுடன் அவரின் அருகிலேயே மற்றொரு தண்டவாளத்தில் பயணித்துள்ளது. கிம் ஜாங் உன்னின் குடும்ப வழக்கப்படி பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த தொடர்வண்டியில் அவர் பயணித்துள்ளார் என்பது கூடுதல் செய்தி. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,077.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.