Show all

உடம்புக்கு என்ன ஆச்சு! நேற்றைக்கு தமிழக அளவில் விஜய்காந்த் போல, இன்றைக்கு உலகஅளவில் கிம் ஜோங் உன்

டொனால்டு டிரம்ப்பை கடுமையாக எதிர்த்து, பின்னர் அவருடன் சமாதானம் ஆகி, அவரை நேரில் சந்தித்தது முதல், அடிக்கடி, ஏவுகணை சோதனை நடத்தியது வரை, உலகச் செய்திகளில் தனக்கான இடத்தை பூர்த்தி செய்து வந்தவர் கிம். தற்போது அவர் உடம்புக்கு என்ன ஆச்சு. தேடல் தெடர்ந்த வண்ணம் உள்ளது.

13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் கருணாநிதி, செயலலிதா ஆகிய பெருந்தலைகளை அடுத்து அந்த இடத்தைப் பிடிப்பார் விஜய்காந்த் என்று ஒரு பேரதிர்வு தமிழகத்தில் கிளர்ந்த காலம் உண்டு. விஜய்காந்த் அவர்களால் தொடங்கப் பட்ட தேமுதிக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக அமருகிற அளவிற்கு வளர்ந்தது. இந்த நிலையில்தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஆனால் இன்றுவரை அந்த மாபெரும் பேராற்றலுக்கு என்ன நிகழ்ந்தது என்ற தகவல் தெளிவு படுத்தப்படவேயில்லை. நாம் அவர் விசயத்தில் ஓரளவிற்கு அமைதியாகவே ஆகிவிட்டோம்.

இன்றைக்கு அந்த மாதிரியான தேடல் முன்னெடுக்கப்படுகிறது. ஆம் அது:  வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு என்ன ஆயிற்று என்கிற ஆர்வம்.

டொனால்டு டிரம்ப்பை கடுமையாக எதிர்த்து, பின்னர் அவருடன் சமாதானம் ஆகி, அவரை நேரில் சந்தித்தது முதல், அடிக்கடி, ஏவுகணை சோதனை நடத்தியது வரை, உலகச் செய்திகளில் தனக்கான இடத்தை பூர்த்தி செய்து வந்தவர் கிம்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை பற்றி மேற்கு நாடுகளின் ஊடகங்கள் வெளியிட்டு வரும் பரபரப்பு தகவல்களால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

36 அகவையே ஆன கிம் ஜாங் உன், கடந்த 2011 ஆம் ஆண்டு, தனது தந்தையின் மறைவிற்கு பிறகு, உலகின் தனிமைப்பட்ட நாடானா வடகொரியாவின் அதிபர் ஆனார்.

தனது தந்தையை போன்றே நாட்டை தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த இவர் பற்றி, சர்ச்சைகளும், கற்பனை கதைகளும், இறக்கை கட்டிப் பறந்தன.

இந்நிலையில் அண்மையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு, சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சில நாட்களில் நடைபெற்ற, அவரது தாத்தாவின் நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், அந்த சிகிச்சையின் போது, மருத்துவரின் கை நடுங்கியதால், சிகிச்சை வெற்றி பெற முடியாமல் போனதாக, பிரிட்டனின் மிரர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே சீனாவில் இருந்து கிம்மிற்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு விரைந்துள்ளது. கிம் இறந்து விட்டதாகவும், அல்லது மரணப் படுக்கையில் போராடி வருவதாகவும் மிரர் பத்திரிக்கை தெரிவித்துள்ள நிலையில், இதனை சீனாவும், தென் கொரியாவும் மறுத்துள்ளன.

கிம் மீண்டும் மக்களிடம் தோன்றுவார் என சீனா நம்பிக்கை அளித்து வருகிறது. அண்மையில் கிம்மின் உடல் நிலை குறித்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், அவர் நலமுடன் இருப்பதாக தான் நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் எங்கே இருக்கிறார் என்று சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் தனியார் அமைப்பு வெளியிட்ட செயற்கைகோள் புகைப்படம் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

வாஷிங்டன் மற்றும் வடகொரியாவை மையமாக கொண்டு செயல்படும் ‘38 நார்த்’ என்ற நிறுவனம் இந்த செயற்கைகோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அங்கு இருக்கும் தொடர்வண்டி ஒன்றின் புகைப்படத்தை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இந்த தொடர்வண்டி நிலையத்தில் ஒரு நடைமேடைப்பகுதி அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்கிற்காக ஒதுக்கப்பட்டது. அதாவது கிம் ஜோங்கின் தனிப்பட்ட தொடர்வண்டி மட்டுமே இங்கு நிறுத்த முடியும். இந்த நிலையில் அந்த தொடர்வண்டி நிலையத்தில் கிம் ஜோங்கின் தொடர்வண்டி தற்போது நிறுத்தப்பட்டு இருக்கிறது. 

இதனால் தொடர்வண்டியில் அவர் கமுக்கமாக இங்கே வந்திருக்க வாய்ய்புள்ளது என்கிறார்கள். ஆனால் வடகொரியா ஏன் இப்படி கிம் உடல் நிலை குறித்து அமைதி காக்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க உளவு அமைப்பை இது பெரிய சந்தேகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. கிம்மிற்கு எதுவும் ஆகவில்லை என்றால் ஏன் இன்னும் வடகொரியா இது தொடர்பாக மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.