Show all

எள்தாம் எண்ணெய்யுக்குக் காய்கிறது எலிப் புழுக்கைக்கு என்ன வேலை! இன்றைய ஊரடங்கை பகடியாடும், நம்பழந்தமிழர் சொலவடை

மழையை வரவேற்கும் மண்ணில், ரெயின் ரெயின் கோ அவே என்று மழலைக்கு மாற்று மொழி கல்வி பயிற்றுவித்து விட்டு, மக்காய் போன பிள்ளைக்காக மரத்தில் மோதி அழுகிற நிலையில் இருக்கிறோம் நாம். நம் சொலவடைகளைத் தொலைத்து விட்டு, தீர்வுக்காய் ஊரடங்கு மடமையை கையிலெடுத்திருக்கிறோம். 

13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா நுண்ணுயிரியைத் தற்போது உலகம் முழுவதும் பரவவிட்டிருக்கிறோம். இதில் நாம் முதலில் செய்திருக்க வேண்டியதும், செய்ய வேண்டியதும் கொரோன நோய் தொற்றாளர்களைப் பிரித்தெடுப்பது. இங்கே அவர்கள்தாம் எள்மணிகள். காயவைத்து பதப்படுத்தப்பட வேண்டிய எள்மணிகள். இந்த இடத்தில் மக்கள் எலிப்புழுக்கைகள்தாம். இந்த தீர்வைதான் நம்தமிழ் சொலவடை அழகாகச் சொல்லுகிறது எள்தாம் எண்நெய்யுக்கு காய்கிறது எலிப் புழுக்கைக்கு என்ன வேலை என்று.

ஆனால் நாம் கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 40 நாட்கள் நிவாரணம் இல்லாத, மக்கள் விலைகொடுப்பில், அரசின் அதிகாரப்பாடான ஊரடங்கு நடைமுறைப் படுத்தியுள்ளோம். இங்கே மக்கள் வாட்டி வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கொரோனாவின் தாக்கம் தனிப்பாதையில் அடையாளம் காணப்படாமல்  தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும், இந்தியா போல ஊரடங்கில், இந்த அளவிற்கு அதிகாரப்பாட்டை கையிலெடுக்கவில்லை. எல்லா நாடுகளும் கொஞ்சம் கொஞ்சம் பகுதிகளுக்குத்தாம் ஊரடங்கை முன்னெடுத்து வருகின்றன. ஏன் கொரோனா தொற்றின் தாயகமான சீனாவே வுகானை மட்டுந்தாம் முழுமையான ஊரடங்கிற்கு உட்படுத்தியது. மக்களை அடிமையாகச் சிந்திப்பதில் பாஜகவிற்கு ஈடுஇணை இல்லையென்பதால் இங்கே நாடுமுழுவதும் ஊரடங்கு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. 

என்ன செய்திருக்க வேண்டும் அல்லது இனியும் என்ன செய்ய வேண்டும்? இத்தனை நாள் மக்கள் தங்கள் எல்லா நோயுக்கும் துணிச்சலாக மருத்துவமனைக்குத்தானே போனார்கள். இப்போது மட்டும், இந்தக் கொரோனாவிற்கு மட்டும் ஏன் மக்கள் நோயை மறைக்கிறார்கள்? அதுவரை காவலில் இருந்த காவலர் ஒருவர், தனக்கு கொரோனா வந்துவிட்டது என்று தெரிந்ததும் அரசிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று காரில் தப்பி ஓடுகிறார். 

கொரோனா நோயளிகளைக் குணமாக்க முடிகிறது. உலகம் முழுவதும் பலஇலட்சம் நோயாளிகள் குணமாகியிருக்கிறார்கள். அப்புறம் ஏன் கொரோனாவிற்கு மருந்தேயில்லை; கொரோனாவிற்கு தடுப்பு மருந்தே இல்லை என்கிற கருத்துப்பரப்புதல். இப்படிக் கருத்துப் பரப்புதல் செய்துவிட்டு அரசு கொரோனா நோயாளியை கைப்பற்ற நினைத்;தால், மருந்தேயில்லை நம்மை என்னசெய்வார்களோ என்று அஞ்சி ஓடத்தானே செய்வார்கள். ஊரடங்கு என்ற நடைமுறையில்கூட மக்களுக்கு அஞ்சி ஓடுதலைத்தானே நாம் பயிற்றுவிக்கிறோம்.

குழந்தைகளுக்கு வருகிற சளிக்கு மருந்து இல்லாமல்தானே அதற்கு தொடக்க நிலைக் குழப்பம் (பிரைமரி காம்ளெக்ஸ்) பெயர் வைத்து விட்டு சிகிச்சை தந்து கொண்டிருக்கிறோம். மருந்து இல்லை என்று அஞ்சி யாரும் அஞ்சி ஓடாமல்தாமே உபாயம் கண்டுபிடித்திருக்கிறோம். 

மஞ்சள் காமலைக்கு மருந்து இருக்கிறதா? ஆனாலும் மக்கள் மருத்துவமனையை நாடி வரத்தானே செய்கின்றார்கள். இப்படி அல்லோபதி மருந்தில்லாத ஆயிரம் வகையான நோயுக்கும் நாம் கண்டுபாவனை (டிரையல் அண்டு எர்ரர்) முறையில் கிசிச்சை கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறோம். நிறைய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் எங்களால் கொரோனாவைக் குணப்படுத்த முடியும் கெஞ்சிக் கேட்டு, நிறைய கணொளிகளை சமூக வலைதளங்களில் பதிந்து வருகிறார்களே அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க என்னதடை? 

மற்ற நோய்கள் போல கொரோனாவிற்கும் அனைத்து தனியார் அரசு மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க அணியப்படுத்துவதுதாம் நாம் கொரோனாவிலிருந்து முற்றாக விடுபட செய்ய வேண்டிய வேலை. தெரு தெருவிற்கு இருக்கிற அனைத்து தனியார் ஆய்வகங்களுக்கும் (இரத்தப்பரிசோதனை நிலையங்கள்) அரசே இலவசமாகவோ, கடனாகவோ கொரோனா பரிசோதனைக் கருவிகளை வாங்கி கொடுப்பதுதாம், நாம் கொரோனாவிலிருந்து முற்றாக விடுபட அரசு செய்ய வேண்டிய வேலை. மக்கள் வீடடங்கி இருப்பது அவர்கள் பாதுகாப்புக்காக அவர்களாகச் செய்ய வேண்டியது. 

அம்மை நோய் வந்து விட்டால் எவ்வளவு பாதுகாப்பு செய்கின்றார்கள் மக்கள். இதை அரசா அவர்களுக்கு கற்றுக் கொடுத்தது. ஊரடங்கு- செயல்படாத அரசின் பம்மாத்து வேலையே அன்றி கொரோனா ஒழிப்பிற்கான தீர்வு அல்லவே அல்ல. ஒரு குற்றவாளி சிக்கினால் கிடப்பில் இருக்கிற பல வழக்குகளை அவன் மீது காவல்துறை சோடிப்பதைப் போல நடப்பில் இருக்கிற பல சிக்கல்களை கொரோனாவின் மீது தூக்கிப் போட்டுவிட்டு மக்களிடம் அனுதாபம் தேடும் உபாயமே இந்த ஊரடங்கு பம்மாத்து.

பொதுப் போக்குவரத்துக்கள், தொடர்வண்டிகள், டாஸ்மாக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இவற்றை அரசு நிவாரணத்தோடு  நிறுத்தினால் போதும். இரு சக்கர வாகனத்;தை நிறுத்துவது, பறிமுதல் செய்வது, இலட்சக்கணக்கில் வழக்குகள் போடுவது, கோடிக்கணக்கில் அபராதம் வசூலிப்பது, வணிகத்திற்காக அலைமோதும் அவர்களை, ஊர்சுற்றுவதாக ஊடகங்களில் புறணி வளர்ப்பது எல்லாம் தடை படுத்துவதற்கு தருக்கமே (லாஜிக்) இல்லாத கொடுமைகளாகும். 

கொரோனா பாதித்தவர்களைக் கண்டுபிடித்திட ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையும் பயன்படுத்துங்கள். சம்பளம் நிவாரணம் இல்லாமல் வீடடங்கச் செய்யப்பட்ட மக்களோடு- சம்பளத்தோடு அரசு அதிகாரிகளையும் வீடடங்கி இருக்கச் செய்வது பொறுபின்மையின் உச்சமாகும். அரசின் அனைத்துத் துறைஅதிகாரிகளையும் களம் இறக்குங்கள். நியாயம் சொல்லுகிற இடத்தில் இருக்கிற அறங்கூற்றுவர்களைக் கட்டாயம் களம் இறக்கியாக வேண்டும். அவர்கள் நியாயத்தை நியாயமாக வழங்க இந்த அனுபவம் அவர்களுக்குப் பயன்படும். காவல்துறை, மருத்துவத்துறை, நலங்குத்துறைகளை மட்டுமே களத்தில் இறக்குவது போதாது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.