கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்றிருந்த போதும் கூட தனித்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் தலைமைஅமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன. 05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழகத்தில் பிரபலமாக கொண்டாடப் படுகிற ஒரு தலைவர். கனடாவில், தமிழக விழாக்களுக்கு அதிக முதன்மைத்துவம் அளிப்பது, தமிழ் கலாசாரம் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பு, உள்ளிட்டவை ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தமிழகத்தில் ஆர்வலர்களை உருவாக்கியுள்ளது. நேற்று கனடா பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிய நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களை வென்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை. அதனால் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் தலைமைஅமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன. தேர்தல் தொடர்பாக தனது கீச்சுப் பக்கத்தில் பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ, நன்றி! கனடா நாடு சரியான திசையில்தான் பயணம் செய்கிறது என எங்கள் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. நீங்கள் யாருக்கு வாக்களித்து இருந்தாலும் எங்கள் கட்சி, கனடாவின் அனைத்து மக்களுக்காகவும் உழைக்கும் எனப் பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் இருந்து ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் ஆளாக தனது வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ 47 ஆண்டுகளுக்கு முன்பு குறைவான வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு இருக்கிறது. தற்போது ஜஸ்டின் ட்ரூடோவும் மீண்டும் தலைமைஅமைச்சராக பதவியேற்றாலும் சிறுபான்மை அரசாகவே அவருடைய அரசு அமையும் இந்த ஒற்றுமை தொடர்பாகவும் பலர் கீச்சு பதிவிட்டு வருகின்றனர். லிபரல் கட்சி ஆதரவாளர்கள் மோன்ரியாலில் வெற்றியைக் கொண்டாட தொடங்கியுள்ளனர். அங்கு கூடிய லிபரல் கட்சியின் ஆதரவாளர்கள் இன்னும் நான்கு ஆண்டுகள் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி என உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். கனடாவில் தமிழ் மக்களின் வாக்குகள் அதிகம் இருக்கின்றன. கடந்த தேர்தலின்போது தமிழ் மக்களிடமும் கனடா மக்களிடமும் அதிக செல்வாக்கை ட்ரூடோ பெற்றிருந்த போதும் இந்தத் தேர்தல் அவருக்கு கடினமாக மாறியதற்கும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இனவெறியைத் தூண்டும் வகையிலான அவரது பழைய புகைப்படங்களும் வெளியானது. இந்த இரு விவகாரங்களும் அவரின் செல்வாக்கை சரிய வழிவகை செய்தது. இந்த இரு விவகாரங்களையும் முன்னிலைப்படுத்தி கன்சர்வேட்டிவ் கட்சி தீவிர கருத்துப் பரப்புதலை முன்னெடுத்ததால் ஜஸ்டின் ட்ரூடோ பின்னடைவைச் சந்தித்தாகக் கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,313.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.