Show all

குவியும் பாராட்டுக்கள்- தமிழர் ஒருவர் வென்றுள்ளார் கனடாவில்! ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வென்றுள்ளார். இந்தத் தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றிபெற்று இருப்பது உலகத் தமிழர்கள் நடுவே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பாராட்ட இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  

05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வென்றுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை. இதனால் இடதுசாரிகள், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியை அமைப்பார்கள் என்று தெரிய வருகிறது.

இந்தத் தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றிபெற்று இருப்பது உலகத் தமிழர்கள் நடுவே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பாராட்ட இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  

ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியைச் சேர்ந்த கேரி ஆனந்தசங்கரி எனப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி வெற்றிபெற்றுள்ளார். இவர் டொரண்டோவில் உள்ள ஸ்கார்பாரோ - ரூஜ் பார்க் தொகுதியில் வென்றுள்ளார். இவர் ஈழத்தைச் சேர்ந்த தமிழர். 39 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தன் அம்மாவுடன் ஈழத்தை விட்டு வெளியேறி அயர்லாந்தில் குடியேறினார். அடுத்து மூன்றாண்டுகளுக்குப் பின்னர் இவர் கனடாவில் குடியேறினார். கனடாவின் கார்லேடான் பல்கலைக்கழகத்தில் இவர் கலைஇளவல் அரசியல் படித்திருக்கிறார். ஹரிணி சிவலிங்கம் என்ற தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

சட்டம் பயின்ற இவர், பதினான்கு ஆண்டுகளாக,  சிறப்பாக வழக்கறிஞர் பணியாற்றி வருகின்றார். பல்வேறு குடியுரிமை சார்ந்த வழக்குகளில் இவர் வாதாடி உள்ளார். அகதிகள் அமைப்புகள் பலவற்றில் இவர் முதன்மைப் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். மனித உரிமை தொடர்பான அமைப்புகள் பலவற்றில் இவர் பெரிய பொறுப்புகளை வகித்து வருகிறார். மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இலங்கை போரில் தமிழர்கள் அனுபவித்த இன்னல்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதில் இவரின் பங்கும் அளப்பரியது. அங்கு நடந்த மனித உரிமை மீறல்களை இவர் உலகிற்கு எடுத்துக்காட்டினார். இதன் மூலம் கனடாவில் இவர் கவனம் பெற்றார். இது தொடர்பான விவாதங்கள் ஐநாவில் எழுப்பப்பட காரணமானார். 

சிலமுறை இவர் தமிழகம் வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கீழடி புகழ் பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு இவர் நெருங்கிய நண்பர். கீழடி தொடர்பான சில கூட்டங்களில் இவர் கலந்து கொண்டு இருக்கிறார். அதேபோல் ஜஸ்டின் ட்ருடோவிற்கு மிகவும் நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழர் என்பதும் ஜஸ்டின் ட்ருடோவின் அன்பிற்கு காரணம் என்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,313.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.