இனி சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அவ்வப்போது பணம் செலுத்தி கடக்கும் நடைமுறை கிடையாது. 150லிருந்து 5000 வரை முன்பணம் செலுத்தி ‘விரைவுக்கட்டு’ அட்டை பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். 04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: என் விரைவுக்கட்டு (My FasTag) என்ற செயலியை வாகன உரிமையாளர்கள் தங்கள் செல்பேசியில் பதிவிறக்கம் செய்து, அதில் 150லிருந்து 5000 வரை என முன்பணமாக கட்டி வைத்துக் கொண்டுதான் சுங்கச்சாவடிகளை இனி கடக்க முடியும். ஆம் வருகிற 15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (01.12.2019) முதல் இந்தத் திட்டம் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படுகிறது. சுங்கச்சாவடி, வங்கிகள், பெட்ரோல் பங்குகள், பொதுச் சேவை மையம் ஆகியவற்றில் விரைவுக்கட்டு (FasTag) அட்டையைப் பெற்று வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டிக் கொள்ளலாம். இந்த அட்டைகளைப் பெற வாகன பதிவுப் புத்தகம், காப்பீடு, வாகன உரிமையாளர்களின் ஆதார் அட்டை ஆகியவற்றை காட்ட வேண்டும். வாகன உரிமையாளர்கள் தாங்கள் சுங்கச்சாவடிகளை எத்தனை முறை கடந்து செல்வார்களோ அதற்கு தகுந்தவாறு குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி இந்த அட்டையைப் பெறலாம். கடந்து செல்வதற்கு தகுந்தவாறு கட்டணங்கள் தானாக கழித்துக் கொள்ளப்பட்டு விடும். அனைத்து தொகையும் தீர்ந்த பின்னர் மீண்டும் பணஏற்றம் செய்துகொள்ளலாம் என்று நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் சொல்லும் காரணம்: சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்காமல் செல்ல இந்தத் திட்டம் உதவுமாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,312.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.