23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜயகலா மகேஷ்வரன் கருத்துக்கு ஒட்டு மொத்த சிங்களர்களும் கொதித்தெழுகிற நிலையில், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்ட ஓர் அறிக்கையில், 'நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எங்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று அழைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். வடமாகாணத்தின் தற்கால பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு' என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த நாள் இன்று வந்திடாதோ என்று விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆகவே, விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. விஜயகலா-வின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று தனது அறிக்கையில் முதல்வர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார். அடுத்த குரலாக தமிழகத்திலிருந்து முதலாவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் குரல் வெளிப்பட்டிருக்கிறது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான விஜயகலா அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இவரின் கணவர் மகேஷ்வரன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் பத்தாண்டுகளுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் இலங்கைத் தீவில், வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. சான்றாக, அண்மையில் ஒரு ஆறு வயதுக் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளது. கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலைகள் நடைபெறுவதால் தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து வந்தால்தான் இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும். தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும்' என்று அமைச்சர் பேசியதுதான் உண்மை நிலை ஆகும். ஆனால், நாடாளுமன்றத்தில் சிங்கள வெறியர்கள் அமைச்சருக்கு எதிராக கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கூச்சலிட்டனர். இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் அறங்கூற்றுவர் விக்னேஸ்வரன், 'அமைச்சர் விஜயகலா பேசியதில் தவறு இல்லை. அதுதான் உண்மை. இங்கு குற்றங்கள் அதிகரித்துவிட்டதால்தான் அவ்விதம் பேசினார்' என்று விளக்கம் அளித்தார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியினர், தங்கள் கட்சியின் சார்பில் அமைச்சர் பொறுப்பில் இருந்த ஒரே ஒரு தமிழரான விஜயகலாவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்ததால், அவர் தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார். இதிலிருந்து தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், தரணிவாழ் தமிழர்களும் ஒரு உண்மையை உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். தேசியத் தலைவர் பிரபாகரனுடைய நேரடிக் கண்காணிப்பில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் தமிழர் தாயகம் இருந்தபோது, மக்களுக்கு எதிராக குற்றங்கள் எவையும் நடைபெறவில்லை. களவு, திருட்டு, மது, போதை, விபசாரம், கொலைகள், எதுவும் நடைபெறாமல் தமிழர்கள் நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ்ந்தனர். கலாசாரமும், பண்பாடும் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சிங்கள ராணுவத்தினரும், காவல்துறையினரும் இளைய தலைமுறையைப் பாழாக்க மதுவையும், போதைப் பொருளையும் திணிக்கின்றனர். குற்றங்கள் அதிகரித்துவிட்டன. தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் வாடுகின்றனர். அமைச்சர் விஜயகலா பேசியதுதான் அங்குள்ள ஈழத்தமிழர்களின் எண்ணமும், உணர்வும் ஆகும். கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்ததுபோல், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் மண்ணில் புதைந்த வித்துகள் விருட்சமாவதைப்போல இன்றைய இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம். வரலாற்றில் எழுதப்படப் போகும் பாடம் ஆகும் என்று கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,841.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



