23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜார்க்கண்ட் மாநிலம், ராம்காரில் உள்ள ஹாசாரிபாக் பகுதியில் கடந்த ஆண்டு அலிமுதீன் அன்சாரி என்ற இஸ்லாமிய இறைச்சி வியாபாரி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற இந்த படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. இந்தக் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு அறங்கூற்றுமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். அதில் ஒருவர் பதினெட்டு அகவை நிறைவு அடையாதவர் என்பதால் அவர் சிறார் குற்ற நடைமுறைச்சட்டப்படி விசாரிக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணை முடிவில் சிறப்பு அறங்கூற்றுமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 11 பேர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரில் 8 பேர் அண்மையில், பிணையில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் பிணையில் வெளிவந்ததை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் உச்ச கட்டமாக ஹாசாரிபாக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் உள்நாட்டு விமானங்கள் போக்குவரத்து துறை அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா ஜாமினில் வெளிவந்த கொலைக்குற்றவாளிகளை வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடுவண் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பிணையில் வெளிவந்த கொலைக் குற்றவாளிகளை மாலை மரியாதை செய்து வரவேற்றதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணைய தளங்களில் பரவி வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,841.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



