கொரோனா தொடங்கிய காலம் முதலே பங்குச் சந்தைகளுக்கும் பாதிப்பு தொடங்கி விட்டது. அதனால் இந்திய நிறுவனங்களின் சொத்து மதிப்பு சரிந்த வண்ணமேயிருக்கின்றது. இது ஒருபக்கம் இருக்கட்டும். நேற்று டிரம்ப் பதிவிட்ட ஒற்றைக் கீச்சுவில் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ரூ.43,850 கோடி சொத்து காலி 09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான கருத்துப் பரப்புதலைத் தொடங்கி வைத்தவர் ஒபாமா. ஆனாலும் ஒபாமா இருந்த வரை இந்தியா உடனான நட்பை நல்ல முறையிலேயே கொண்டு சென்றது அமெரிக்கா. ஆனால் ட்ரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்தே, இந்தியாவை பல கோணங்களில் சீண்டிப் பார்ப்பது வாடிக்கையாகி விட்டது அமெரிக்காவுக்கு. அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நுழைவுஅனுமதி தொடங்கி அண்மையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை மிரட்டி வாங்கியது வரை அமெரிக்க சீண்டல்களுக்கான சாட்சி. அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் ஏற்கனவே அமெரிக்கா வழங்கும் எச்-1பி என்கிற நுழைவுஅனுமதிகளில் கணிசமானவற்றை, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வழியாகத்தாம் வாங்கிக் கொண்டு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக தகவல்; தொழில்நுட்ப நிறுவனங்களில், இந்தியர்கள் இந்த எச்-1பி நுழைவுஅனுமதியை வைத்துக் கொண்டு தாம் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நுழைவுஅனுமதி கெடுபிடி, நுழைவுஅனுமதி எண்ணிக்கைகளில் கை வைப்பதாகச் சொல்வது, இந்தியர்களுக்கான நுழைவுஅனுமதி காலம் நீட்டிப்புகளில் கெடுபிடி செய்வது, நுழைவுஅனுமதி வழங்கும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவது என அமெரிக்க அரசு தொடர்ந்து இந்தியாவுக்கு பல குடைச்சல்களைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “கொரோனா என்கிற கண்ணுக்குத் தெரியாத எதிரி நம்மை தாக்கிக் கொண்டு இருப்பதாலும், அமெரிக்க குடிமக்களின் வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதாலும், தற்காலிகமாக குடியேற்றத்தை நீக்கம் செய்ய, ஒரு செயல் ஆணையில் கையெழுத்து இட இருக்கிறேன்” என்று ஒரு கீச்சு பதிவிட்டதுதான் தாமதம். இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் தட தடவென சரியத் தொடங்கிவிட்டன. இந்தப் பங்குகள் விலை சரிவால் இந்தியாவின் முதன்மையாகவுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமாராக 43,850 கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்து இருக்கிறார்கள். இந்தியாவிற்கு கொரோனா நிதி வாரிவாரி வழங்கிய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 29,100 கோடி ரூபாய். இன்போசிஸ் 8,000 கோடி ரூபாய் ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் 3,700 கோடி ரூபாய் விப்ரோ 1,750 கோடி ரூபாய் டெக் மஹிந்திரா 1,300 கோடி ரூபாய் என மொத்தம் 43,850 கோடி ரூபாயை இழந்து இருக்கின்றன. இன்னும் ஹெக்ஸாவேர் டெக்னாலஜீஸ், மைண்ட் ட்ரீ, என்ஐஐடி டெக்னாலஜீஸ் போன்ற கம்பெனிகளின் இழப்பை சேர்த்தால் இன்னும் பல ஆயிரம் கோடிக்கு கணக்கு சொல்லலாம். அதிபர் ட்ரம்பின் குடியேற்றம் சார்ந்த ஒற்றைக் கீச்சுவால், இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலைகள் நேற்று இவ்வாறு சரிந்தன. அதனால் அந்த நிறுவனங்களின் சொத்து மதிப்பும் சரிந்தன. எந்த நிறுவனமும் குறைந்தது ஐம்பது விழுக்காட்டு பங்குகளை தம்வசம் வைத்திருக்க வேண்டிய நிலையில், பங்கு விலை சரிந்தால் அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு சரியும் என்பது விதி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



