Show all

ஊரடங்கு வெளிப்படுத்திய பாசமலர்கள்! தங்கையை அழைத்துவர 85கிமீ பழுதான மிதிவண்டியில் பயணித்த அண்ணன்

அன்னையின் கோரிக்கைகாக தன் தங்கையை அழைத்து வருவதற்காக மதுரையைச் சேர்ந்த இளைஞர் பழுதான மிதிவண்டியில் 85கிமீ பயணித்து  தங்கையைச் சந்தித்து அழைத்துச் சென்றார்.

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கரோனாவினால் தற்போது நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில, மாவட்ட தொழிலாளர்கள் பலரும் தொடர்ந்து தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கினால் தனது தங்கையை அழைத்துச் செல்ல அண்ணன் பழுதான மிதிவண்டியிலேயே மதுரையில் இருந்து தேனி வந்துள்ளார்.

மதுரை கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த இணையர் முத்து, தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஜீவராஜ் அகவை22 என்ற மகனும், பிரவீனா அகவை20 என்ற மகளும் உள்ளனர். முத்து சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் தமிழச்;செல்வி தனியார் பள்ளியில் தூய்மைப் பணியாளராக உள்ளார்.

பிரவீனா தேனியில் உள்ள தனியார் கண் மருத்துமனையில் செவிலியர் பயிற்சி முடித்துவிட்டு அங்கேயே பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தாய் தமிழ்ச்செல்விக்கு உடல்நிலை சரியில்லை. எனவே பிரவீனாவை எப்படியாவது அழைத்து வரும்படி தனது மகன் ஜீவராஜிடம் கூறியுள்ளார்.

தற்போது ஊரடங்கு இருக்கும் நிலையில் தனது தங்கையை எப்படி அழைத்து வருவது என்று ஜீவராஜ் குழம்பி உள்ளார். வேறுவழியின்றி தனது மதிவண்டியில் கிளம்ப முடிவு செய்தார். டியூப் பழையதாக இருந்ததால் காற்று நீண்ட நேரம் தங்காது வெளியேறிவிடும். எனவே காற்று அடிக்கும் பம்ப்பையும் எடுத்து வைத்துக் கொண்டார்.

மதுரையில் இருந்து கிளம்பிய ஜீவராஜ் 85 கிமீ தூரத்தை கடந்து நேற்று இரவு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் மிதிவண்டியில் செல்ல வேண்டாம். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறலாம் என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்த காரில் மதுரை நோக்கி கிளம்பிச் சென்றனர்.

ஊரடங்கு நேரத்தில் தனது தங்கைக்காக பழுதான மதிவண்டியில் வந்த அண்ணன் பாசம் இப்பகுதி காவலர்கள் மற்றும் மருத்துவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஜீவராஜ் கூறுகையில், இரண்டு டயரும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் ஒரு கிமீ. சென்றதும் காற்று இறங்கிவிடும். மீண்டும் காற்றடித்துவிட்டு கிளம்புவேன். இதனால் காலையில் கிளம்பிய நான் தேனி வருவதற்குள் இரவாகிவிட்டது.

மருத்துவமனை காவலர்களிடம் கேட்ட போது காலையில்தான் பார்க்க முடியும் என்றனர். எனவே மருத்துவமனை முன்பு இருந்து பயணிகள் நிழற்குடையில் தூங்கிவிட்டேன். மறுநாள் மருத்துவமனையில் விபரத்தை சொன்னதும், கிளம்பிச் செல்ல ஏற்பாடு செய்தனர் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.