24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எகிப்தில் சுமார் 30 ஆண்டு காலம் அதிபராகவும், ராணுவ ஆட்சியாளராகவும் இருந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ந்தது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் முகமது மோர்ஸி எகிப்து அதிபரானார். எகிப்தில் மக்கள் பேராளர்கள் ஆட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார். எனினும் அவரது ஆட்சிக்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. இதனால் அவரது ஆட்சி ராணுவத்தால் அகற்றப்பட்டது. இதையடுத்து மோர்ஸியின் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். கொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் தெற்கு எகிப்தில் பதவி நீக்கப்பட்ட மோர்ஸியை மீண்டும் அதிபராக்க வேண்டுமென்று வலியுறுத்தி நிகழ்ந்தது. இதுதொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வன்முறை வழக்கில் பலருக்கு அறங்கூற்றுமன்றம் மரண தண்டனை வழங்கியது. பின்னர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி பதவி நீக்கப்பட்டதை எதிர்த்து நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் 75 பேரின் மரண தண்டனையை அந்நாட்டு அறங்கூற்றுமன்றம் இறுதி செய்துள்ளது. உலகம் முழுவதும் ஆட்சிமுறைகளில் இன்னும் எந்த நாட்டிலும் ஒரு நிறைவு ஏற்படவில்லை. ஆட்சியாளர்கள் அதிகராத்திற்கும், தமக்கான உரிமைகள் கிடைக்கப் பெறவில்லை என்கிற கூட்டத்தார்களுக்குமான அதிர்ப்திக்குமான இழுபறி வன்முறை நீடித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனாலும், செவ்வாயில் மனிதர் வாழமுடியுமா? வியாழனில் மனிதர் வாழ முடியுமா என்று தேடிக் கொண்டிருக்கும் மனித இனம்: மனிதர்களாக வாழ்வதற்கான வழிமுறையைத் தாம் கண்டு பிடிக்காமல் இருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,905.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



