24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் கருத்துப் பரப்புதலுக்காக, தமிழகம் வந்த முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி திருபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் ஆயுள்தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கில் கடந்த வியாழக் கிழமையன்று தீர்ப்பு கூறிய உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள், ராஜீவ் கொலை வழக்கில் சிறைப் படுத்தப்பட்டுள்ள 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து, ஆளுநருக்கு தெரிவிக்கலாம். ஆளுநர் பரிசீலித்து இறுதி முடிவை அறிவிப்பார் என்று தெரிவித்தனர். இதையடுத்து, சட்ட நிபுணர்கள், மூத்த அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் அடிப்படையில், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது. இதற்காக தமிழக அமைச்சரவை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,905.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



