Show all

சிங்கத்தை அதன் குகையிலேயே எதிர் கொண்டார் ட்ரம்ப்! ஆம். வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னை அந்நாட்டு எல்லையில் சந்தித்தார்.

வடகொரியாவை அணு ஆயுதங்களை கைவிடும் முடிவில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் முகமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னை அந்நாட்டு எல்லையில் சந்தித்துப் பேசினார். 

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வடகொரியாவுக்குள் காலடி எடுத்து வைத்தார் ட்ரம்ப். இதன்மூலம், வடகொரியாவுக்குள் கால்பதித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ட்ரம்ப் கொண்டாடலாம். டிரம்பை எல்லைக்கே வந்து வரவேற்ற கிம் ஜாங் உன், இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று புகழாரம் சூட்டினார். 

வடகொரியாவில் ட்ரம்பைச் சந்திக்கும் நிகழ்வு நடைபெறும் என்று தான் கனவிலும் எண்ணியதில்லை என்றும் கிம் ஜாங் உன் குறிப்பிட்டார். உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. என்று கூறி ட்ரம்பை வடகொரியாவுக்குள் வரவேற்றார் கிம் ஜாங் உன். 

அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், வடகொரிய எல்லைக்குள் காலடி எடுத்துவைப்பது தமக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றார். அதேபோல், கிம் ஜாங் உன்னை வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறும் அவர் அழைப்பு விடுத்தார். வடகொரியாவுக்கு வருகைதர முடிவு செய்த ட்ரம்ப்பைப் பாராட்டிய கிம் ஜாங் உன், இது தைரியமான மற்றும் உறுதியான செயல் என்று கூறி மகிழ்ந்தார். 

அதன்பின்னர் வடகொரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள பன்முன்ஜோம் கிராமத்தில் இரு தலைவர்கள் இடையே அதிகாரபூர்வ சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு 50 நிமிடங்கள் வரை நீடித்தது. 

முன்னதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னை தென்கொரிய எல்லையில் சந்தித்துப் பேசிய ட்ரம்ப் எல்லைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு மையத்தையும் பார்வையிட்டார். அப்போது பேசிய ட்ரம்ப், சிங்கப்பூரில் வடகொரிய அதிபரை முதல்முறையாக சந்திக்கும் முன்னர் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததாகக் குறிப்பிட்டார். மூன்றாவது முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திப்பது குறித்து பேசிய அவர், தங்களது முதல் சந்திப்புக்குப் பின்னர் ஆபத்துகள் அனைத்தும் நீங்கிவிட்டதாகவும் தீர்வுகளை நோக்கிய பாதையில் சந்திப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,199.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.