பயன்பாட்டாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பயன்பாட்டாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனிநபர் கமுக்கம் பேணும் வகைக்காக, கூகுள் தேடலில் மறைநிலை சாளரம் (இன்காக்னிடோ) என்ற ஒரு வாய்ப்பினை கூகுள் வழங்குகிறது. ஆனால், இதில் ஒருவர் எதையாவது தேடுகிறபோது, அவரது அந்தரங்க உரிமையை மீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கண்காணிப்பதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மறைநிலை சாளரப் பயன்முறையில் பயன்பாட்டாளர்கள் தேடுகிறபோது, அவர்கள் எதையெல்லாம் தேடுகிறார்கள் என்பது கண்காணிக்கப்படாது என்ற நம்பிக்கையில்தான் தேடுகிறார்கள். அவர்கள் என்ன தேடுகிறார்கள் என்பதுவும் அதில் பதிவாகாது. அந்த நம்பிக்கையின் மீது இடி விழுந்தாற்போன்று, இப்போது அது கண்காணிக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் ரூ.37,500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு கலிபோர்னியா மாகாணம், சான் ஜோஸ் நகரில் உள்ள அறங்கூற்றமன்றத்தில் போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கில், கூகுள் கணினி அல்லது செல்போனை கொண்டுள்ள ஒவ்வொருவரிடம் இருந்தும் கமுக்க மற்றும் அங்கீகரிக்கப்படாத தரவு சேகரிப்பில் தொடர்ந்து ஈடுபட முடியாது என கூறப்பட்டுள்ளது. மேலும் எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் தங்களது தனிப்பட்ட தகவல் தொடர்புகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் தடுத்து, சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன அல்லது ஆதாயத்துக்காக சுரண்டப்படுகின்றன என்பதை அறிந்து கவலைப்படுகிறார்கள் என்றும் வழக்கில் கூறப்பட்டுள்ளது. சான் ஜோஸ் நகரில் உள்ள நடுமை அறங்கூற்றுமன்றத்தில் போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் தொடுத்துள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



