Show all

இன்று உலக தாய்மொழி நாள்

உலக மக்களால் பயன்படுத்தும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் உலக தாய்மொழி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலக மக்களால் பயன்படுத்தும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் உலக தாய்மொழி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தாய்மொழி நாள் உருவாகக் காரணமாக அமைந்தது:- வங்கதேசத்தில் வங்கமொழியைக் காக்க டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தடையை மீறி நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 மாணவர்கள் மொழிக்காக உயிர்த் தியாகம் செய்தமையாகும். உயிரிழந்தவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இன்றைய நாள் உலக தாய்மொழி நாளாக கொண்டாட ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன (யுனெஸ்கோ) மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தாய்மொழி நாள் கடந்த இருபது ஆண்டுகளாக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மொழி தேசங்களை கூறுபோடும் வல்லமை படைத்தது என்பது வரலாற்று உண்மை. மதத்தை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தான் என்கிற தேசத்தை உருவாக்கினார்கள். ஆனால், மிகக்குறைவான மக்கள் பேசிய உருதுவை மட்டும் தேசிய மொழியாக அறிவித்துவிட்டு வங்க மொழியை புறக்கணித்தார்கள் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள். அதை எதிர்த்து இதே நாளில் போராடிய எண்ணற்ற கல்லூரி மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பின்னர் மொழிசார்ந்த சிக்கல் தனி வங்கதேசத்துக்கே வழிவகுத்தது.

ஒருவனுக்கு அவன் கற்றறியும் அனைத்து மொழிகளும் கருவிகள் மட்டுமே. ஆனால் அவனது தாய்மொழி என்பது வெறும் கருவி இல்லை. அவனின், அவனது இனத்தின் அடையாளம். பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைமுறை, சிந்தனை எல்லாவற்றிலும் முதன்மைப் பங்காற்றும், நீங்காத அங்கமாக இருக்கும் சிறப்பு, தாய்மொழிக்கு உண்டு. 

உலகில் அதிக இலக்கிய நோபல் பரிசுகளை அள்ளி இருக்கும் பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரெஞ்சு மொழியில் பேசுவதை பெருமையாக நினைப்பவர்கள்! ஆங்கில மொழியின் சொற்கள் தன்னுடைய மொழியில் கலக்கக்கூடாது என்று சட்டமியற்றுகிற அளவுக்கு மொழிப்பற்று கொண்ட அவர்களுக்கும் இங்கிலாந்துக்கும் சில நாட்டிகல் மைல் தான் தூரம்.

அன்னை மொழியை புறக்கணித்து பிள்ளைகளின் இயல்பான சிந்தனையை சிதைக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இயல்அறிவில் (சயின்ஸ்) அதிகபட்ச நோபல் பரிசை பெற்றவர்கள் எல்லாம் தங்களின் தாய்மொழியில் பயின்றவர்களே. இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் மேதைகளும் தாய்மொழி வழிக்கல்வியே தேவை என்று வலியுறுத்தினார்கள்.

தமிழ்!
என்னுடைய முதலாவது உடைமை.
என் தாய் தன் இரத்தத்தை பாலாக்கி என் உடல் வளர்த்தார்.
தன் உயிர்க்காற்றை மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்தார்.
என்உடலும் என்தமிழும் என் தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள். அவைகளே எனக்கு அடிப்படை.
அவைகளே எனக்கு ஆதாரம்.
என்தமிழ் !
என்தாய் எனக்கு தந்த முதல் உடைமை என்பதே எனக்குப் பெருமை.
என்தமிழை!
எந்த இன்னொரு மொழியோடும் வைத்து ஒப்பிடத் தேவையில்லை. 
என்தமிழை!
 பாதுகாக்க வேண்டியதும் பெருமைப் படுத்த வேண்டியதுமான கடமை என்னுடைதே.
தாய்மொழி!
 வெறுமனே கருத்துப் பறிமாற்றக் கருவியன்று. அதுவே அவன் அறிவின் மூலம்.
அடுத்த மொழிகள் எத்தனை கற்றாலும் அவைகள் கருவிகள் மட்டுமே.
தமிழ் உயர்வானது! 
தமிழ் பழமையானது!
தமிழ் வளமையானது!
தமிழ் செம்மையானது!
என்பதெல்லாம் நிற்காது.
தமிழ் என்தாய் எனக்குத் தந்த முதல் உடைமை என்பது ஒன்றே நிற்கும்.
என்பதை உலக தாய்மொழி ஒவ்வொரு தமிழரும் உணர்வோமாக.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.