நடுவண் பாஜக அரசு குடியுரிமைத் திருத்தசட்டத்தை திரும்பப்பெற வேண்டியது குறித்தும், தமிழக அரசு வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டத்தில் நடுவண் பாஜக அரசுக்கு பணிந்து விடக்கூடாது என்றும், ஆளுநர் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில் கருத்து செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் வைகோ. 08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் இப்போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டை ஆக்கிரமித்து விடலாம் என்று பா.ஜ.க நினைப்பது நடக்காது என்று செய்தியாளர்களிடம் கூறினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. தெருக்களுக்கு வர மாட்டார்கள் இஸ்லாமிய சகோதரிகள், ஆனால் கடந்த 7 நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள் என்றும், கண்ணகி போராடிய மதுரை மண்ணிலிருந்து இஸ்லாமியப் பெண்கள் போராடுகிறார்கள் என்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராளிப்பெண்களின் வலிமையை தெளிவு படுத்தியுள்ளார் வைகோ. கழிமுகப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட நடுவண் பாஜக அரசு விரும்பாது. இதற்கு எதிராக தமிழக அரசின் சட்டம் இயற்றுவது, தீர்மானம் இயற்றுவதை பாஜக அரசு பொருட்படுத்தாது. குப்பைத் தொட்டிக்குத்தான் அரசின் தீர்மானம் போகும் என்று தமிழக அரசின் வலிமையின்மையை தெளிவு படுத்தினார் வைகோ. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் காலம் தாழ்த்தாமல் ஆளுநர் நல்லமுடிவை உடனே அறிவிக்க வேண்டும் ஆளுநருக்கு தனது கட்சியின் சார்பாக அழுத்தத்தைப் பதிவு செய்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



