நடுவண் அரசுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதையும், தமிழக அரசுக்கு:- இந்த அதிகாரம் இல்லை, அந்த அதிகாரம் இல்லை என்று இந்திய விடுதலை பெற்றதிலிருந்து ஒவ்வொரு சட்ட முன்னெடுப்பிலும் அசிங்கப்பட்டு வருவதே தமிழக அரசுக்கான வரலாறாக அமைந்திருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட முன்னெடுப்பிலும் அதுதான் நடக்குமா? 09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் அரசுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதையும், தமிழக அரசுக்கு:- இந்த அதிகாரம் இல்லை, அந்த அதிகாரம் இல்லை என்று இந்திய விடுதலை பெற்றதிலிருந்து ஒவ்வொரு சட்ட முன்னெடுப்பிலும் அசிங்கப்பட்டு வருவதே தமிழக அரசுக்கான வரலாறாக அமைந்திருக்கிறது. தமிழக அரசு முன்னெடுக்கிற சட்ட முன்வடிவில் குறைபாடுகள் இருப்பதாகக்கூறி அவ்வப்போது ஆளும் அரசு கெட்டபெயரை ஏற்றுக் கொள்ள அந்தச் சட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவோம். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த சிக்கல் எழவில்லை. ஏனென்றால் நடுவண் அரசின் கொள்கை முடிவுகளை திணிப்பதும் அமல்படுத்துவதுமே காங்கிரஸ் அரசின் நோக்கமாக இருந்தது. தமிழக உரிமைக்காகவென்றே முன்னெடுக்கப்பட்ட திமுக ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே பல்வேறு சட்ட முன்எடுப்புகளில் தோல்வியையே சந்தித்து வருகிறோம். நமக்கான நியாயத்திற்காக வாதாடும் அறங்கூற்றுமன்றத்திலேயே இன்னும் தமிழுக்கு இடம் கிடைத்திடவில்லை என்பதுதான தலைமைத்துவமான சோகம். ஆட்சியில் இருக்கும் போதே செயலலிதா அவர்கள் சிறையில் தள்ளப்பட்ட அதிகாரமின்மை வரலாறு மாநில அரசு தலைவர்களுக்கு மட்டுமே சொந்தம். இந்தப் பேருந்தில் ஏறாமல் இருந்திருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம் எனவே இந்தப் பேருந்தில் ஏறியது குற்றம் என்பது போன்ற, கற்பனையான குற்றச்சாட்டுக்கு பலியான கனிமொழி, ஆ.இராச எல்லாம் மாநில தலைவர்களுக்கு மட்டுமே முன்னெடுக்கப்படும் கொடுமைகள். கோயில்களில் தமிழுக்கான- தமிழர்களுக்கான அதிகாரம், அறங்கூற்று மன்றத்தில் தமிழுக்கான தமிழக அரசுக்கான அதிகாரம், கல்வியில் தமிழுக்கான அதிகாரம் இன்னும் முன்னெடுக்கப்படவேயில்லை. உலகம் இன்றைய நாளை தாய்மொழி நாளாகக் கொண்டாடுகிறது. ஒன்றிய அரசான இந்தியாவில் தமிழுக்கான அதிகாரம் இன்னும் இல்லை. இந்தவாறான நிலையில்தான்- தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட முன்வடிவில் மிகப்பெரும் குறைபாடுகள் இருப்பதாக தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் சுட்டிக்காட்டுகிறார். காவிரிப்படுகையில் ஏற்கெனவே செயலில் உள்ள திட்டங்களுக்கும் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவிரிப்படுகையில் வேதாந்தா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம் எடுத்துள்ள இடங்களையும், திட்டங்களையும் இச்சட்டம் கட்டுப்படுத்தாது என்றுதானே பொருள் என்கிறார். இதை நிதானமாக ஆய்வு செய்து, சட்ட சிக்கல் எழாதவாறு, இதை சிறப்பான சட்டமாக உருவாக்க முதலமைச்சர் முயற்சி செய்திருக்க வேண்டும். அவ்வாறு உருவாக்க, இச்சட்ட முன்வடிவை சட்டமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்பியிருக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற இச்சட்டத்தின் நோக்கத்துக்கு இடையூறாக உள்ள திட்டங்களை நிறுத்தி வைக்க, நடுவண் அரசும் துணை செய்ய வேண்டுமென்று கடிதம் எழுதியுள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். அவசர அவசரமாக அரைகுறையாக இச்சட்டம் இயற்றப்பட்டிருப்பதும் நடுவண் அரசுக்குக் கடிதம் எழுதி விட்டோம் என்று கூறுவதும் ஏற்புடையதல்ல. இந்தச் சட்டமும் நீட் விலக்கு சட்டம்போல ஆகிவிடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. சிறப்பு வேளாண் மண்டல நிர்வாகத்தைக் கவனிக்க முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு மாறாக, தன்னாட்சி அதிகாரமுள்ள வல்லுநர் குழுவாக அமைத்திருக்க வேண்டும். அதில் உழவர் பேராளர்களும் கட்டாயம் இடம்பெற வேண்டும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இச்சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பும் முன் விரிவான ஆய்வு செய்து, உரிய வல்லுநர்களைக் கொண்டு தேவையான திருத்தங்கள் செய்து காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உண்மையில் மாற்றுவதற்கு வெளிப்படையாக செயல்பட வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் சுட்டிக்காட்டுகிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



