Show all

இன்று, அமெரிக்க சின்னப்பையன் (அணுகுண்டு), ஜப்பானை சோகத்திற்குள்ளாக்கிய, கிரோசிமா நாள்

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி இன்றுடன் 73 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. வெள்ளையர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஒன்பது நாட்களுக்கு முன்பு:

அன்று காலை வழக்கம்போல் ஜப்பானின் துறைமுக நகரான கிரோசிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகி கொண்டிருந்தது. எத்தனையோ ஆழிப் பேரலைகளுக்கு பழக்கப்பட்டிருந்த ஜப்பானியர்களால் வரப்போகும் சூறாவளியைப் பற்றி அறிந்திருக்க முடியவில்லை. எனோலா கே என்ற டீ-29 ரக விமானத்தில் அமெரிக்காவிலிருந்து, அந்நாட்டின் விமானப்படை வீரரான போல் டிபெட்ஸ், ஹிரோஷிமா நகரினை நெருங்கிக் கொண்டிருக்கையில் நேரம் காலை 8.00 மணியைத் தாண்டிவிட்டிருந்தது. சரியாக காலை 8.15ற்கு அந்த சூறாவளி விண்ணிலிருந்து தரை நோக்கி முதலாவது அணுகுண்டு பெயர் சின்னப்பையன், மனித குலத்தை நாசமாக்க வெடித்துக் கிளம்பியது. 

முதன்முறையாக அணு ஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியளாலர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டு முயற்சியாலும், இரண்டாம் உலகபோரின் போது, நடந்த ரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது. முதல் அணு ஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் எற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான கிரோசிமா, நாகசாகி மீது பயன்படுத்தபட்டது. 

சின்னப்பையன் தன் கடமையைச் சரிவரச் செய்து விட்டான் என்கின்ற செய்தியோடு போல் டிபெட்ஸ் தன் தாயகத்திற்கு திரும்பினார். கிரோசிமா எரிந்தழியத் தொடங்கியது. முதலாவது அணுகுண்டின் வீரியத்தைக் கண்டு மனிதகுலம் உறைந்தது.

ஒற்றைக் குண்டு, சுமார் 4 இலட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் 580 மீட்டர் உயரத்தில் அக்குண்டு வெடித்ததும் கண்களைக் குருடாக்கும் வெளிச்சம் வான் வெளியில் பரவியது. காற்றின் வெப்பநிலை 4,000 விழுக்காடு உயர்ந்தது. மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி ஊழித் தீயாய்ப் புறப்பட்டது. குண்டு வெடித்த 15 விநாடிகளில் 12 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு ராட்சதக் கதிர்வீச்சுப் புகை மண்டலம் எழுந்து நின்றது. மரங்கள் தீப்பந்தங்களாகின. இரும்புத் தூண்கள் உருகி ஓடின. குண்டு வெடித்த ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் அப்பாவி மக்களுடன் அந்த நகரையே சுடுகாடாக்கியிருந்தது. கிரோஷிமாவில் இருந்த சுமார் 75 ஆயிரம் கட்டிடங்களில் 70 விழுக்காடு சாம்பலாகின. 

மீண்டும் மூன்று நாட்கள் கழித்து முற்பகல் 11.02 மணிக்கு குண்டு மனிதன் என்று பெயரிடப்பட்ட மற்றொரு அணுகுண்டை நாகசாகி நகரின் மீது அமெரிக்கப் போர் விமானம் வீசியது. நகரின் மையப்பகுதியில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் வெடித்த அக்குண்டினால் அந்நகரில் வாழ்ந்த 280,000 மக்களில் 40 ஆயிரம் பேர் உடனடியாகவே இறந்தனர். இரு அணுகுண்டுத் தாக்குதல்களின் விளைவான காயங்களினாலும் கதிர்வீச்சுத் தாக்கங்களினாலும் அடுத்த ஒரு ஆண்டிற்குள் இரு நகரங்களிலும் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் பலியாகினர். கிரோசிமாவில் 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் நாகசாகியில் 6.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் முற்றாக எரிந்து சாம்பலாகின. உயிர் தப்பியவர்கள் பல ஆண்டுகள் கழித்தும் கூட கதிரியக்க நச்சினாலும் புற்று நோயினாலும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வண்ணமேயிருக்கிறார்கள். இன்றும் கூட அந்த நகரங்களில் பிறக்கும் பல குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே உலகைத் தரிசிக்கிறார்கள். எப்படியோ இரண்டாவது உலக பெரும் போருக்கு பின்னரான கடந்த 73 ஆண்டுகளாக அணு ஆயுத உபயோகம் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,871.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.