Show all

நாளை பேருந்துகள், தானிகள், அழைப்பு சொகுசு வாகனங்கள் அனைத்தும் ஓடா! மோட்டார்வாகனத் துறை அனைத்து அமைப்புகள் போராட்டம்

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து, பல்வேறு சட்ட மசோதாக்களில், நாட்டின் மிகச் சில கார்ப்பரேட்டுகள் மட்டும் பயனடையும் வகையாக, திருத்தங்களைச் செய்து வருகிறது. அந்த வகையாக தற்போது, மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்தால் இத்தொழிலில் இருந்து வருவோருக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதாலும், இந்தத் துறையும் கார்ப்பரேட் மயமாக்கப் படும் என்பதாலும், மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்.பி.எப்., பாட்டாளி, விடுதலை சிறுத்தை, மறுமலர்ச்சி, தே.மு.தி.க. போன்ற சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு போக்குவரத்து, தானிகள், அழைப்பு செகுசு வண்டிகள் போன்றவை ஓடா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பளு ஏற்றும் தானி, வாகனப் பணிமனைகள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் போன்ற மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

இதுகுறித்து அரசு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளரும் சாலை போக்குவரத்து சம்மேளன தலைவருமான ஆறுமுக நயினார் கூறியதாவது:

நடுவண் அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக நாளை ஒருநாள் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக வேலைநிறுத்தம் நடக்கிறது. ஆளும்கட்சி தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து சங்கங்களும் இதில் பங்கேற்கின்றன. அதனால் நாளை தானி, அழைப்பு சொகுசு வண்டிகள், உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடா. தமிழகத்தில் 3 லட்சம் தானிகள் நாளை ஓடா. சென்னையை பொறுத்தவரை 1½ லட்சம் தானிகள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

மேலும் அனைத்து தொழிற்சங்கம் சார்பாக அண்ணாசாலை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,871.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.