21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. ஆனால் கடந்த 3 மாதங்களாக தினமும் பயணிகள் சிலரிடம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். இதன் மூலம் பல கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 70 பயணிகள் இருந்தனர். விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும் அவர்களது எல்லைக்கடவு, குடியுரிமை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் செய்து கொண்டிருந்தனர். பயணிகளில் 20 பேர் சுங்க சோதனை முடிந்து வெளியே வந்தனர். அப்போது அங்கு திடீர் என வந்த நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 11 பேர் அவர்களை சூழ்ந்து கொண்டு, அப்படியே மீண்டும் விமான நிலையத்தின் உள்ளே அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினர். கடத்தல் சம்பவங்களில் திருச்சி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், குடியுரிமை பிரிவு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பதற்காக அவர்களிடமும் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர். பயணிகள், விமான நிலைய பணியாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோரிடம் இன்று காலை தொடர் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் சுங்கதுறை அதிகாரிகள் 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர். சுங்கத்துறை உதவி ஆணையர் மற்றும் 2 கண்காணிப்பாளர்களை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். தங்கம் கடத்தலில் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. கடத்தல்கள் தொடர்பாக சுங்கத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 3 பேர் மீது நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். மாநில அரசு, நடுவண் அரசு அனைத்து துறைகளிலும் அதிகாரிகளிடம் ஊழல் மலிந்து கிடப்பது உள்ளங்கை நெல்லிக்கனி! அவ்வப்போது நடத்தப் படும் இப்படி சில அதிரடிகளை, மக்கள் வெறுமனே நாடகமாகவே கருதுகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,871.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



