17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் தலைமை அமைச்சராக இம்ரான்கான் பதவி ஏற்கும் போதே மூன்று நெருக்கடிகள் அவருக்கு அறைகூவலாக நிற்கின்றன. 1.இந்தியா 2.அமெரிக்கா 3.பொருளாதார நெருக்கடி. ஆம் ; பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவதற்கு சுமார் ரூ.63 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது என அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் அவையில் பேசிய நிதி அமைச்சர் ஆசாத் உமர் தகவல் வெளியிட்டார். பாகிஸ்தானில் மாற்றங்களை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து உள்ள புதிய பிரதமர் இம்ரான்கான் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலில் தலைமை அமைச்சருக்கான அதிகாரப்பூர்வ பங்களாவில் தான் வசிக்கப்போவதில்லை என அறிவித்தார். தனக்கு 2 ஊழியர்கள் போதும், 2 கார்கள் போதும் என கூறினார். பாகிஸ்தான் தலைமை அமைச்சருக்கு நிறைய சொகுசு கார்கள் இருக்கின்றன. அவற்றில் விலை உயர்ந்த 8 பி.எம்.டபிள்யு கார்கள், 4 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள், குண்டு துளைக்காத லேண்ட் குரூசர் வாகனங்கள் 4, பழைய மாதிரி கார்கள் 8 அடங்கும். இந்த வாகனங்கள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்து அரசின் கருவூலத்தில் சேர்க்க இம்ரான்கான் அரசு முடிவு செய்துள்ளது. ஆயுதக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கத் தவறியதால், பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர்கள் உதவி தொகையை ரத்து செய்வதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை பெற்றுக் கொண்டு, தங்களையே ஏமாற்றுவதாக பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய தொகையை மற்ற அவசர விசயங்களுக்கு முன்னுரிமை அளித்து அதற்கு செலவிடப் போவதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஹக்கானி மற்றும் ஆப்கான் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த தவறியதாக பாகிஸ்தானை அமெரிக்க அரசுத்துறை விமர்சித்துள்ளது. அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ள பென்டகன், பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர்கள் உதவி தொகையை வேறு விசயங்களுக்கு பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் புதிய தலைமை அமைச்சரான இம்ரான் கானை சந்திக்க, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ அங்கு செல்லவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு இதே பிரச்சனையோடு காசுமீரும் சேர்த்தி. எப்படி விளையாடப் போகிறார் இம்ரான்கான் இந்த மூன்று அறைகூவல்களுக்கும் எதிராக. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,898.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



