17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாநகரப் பேருந்தில் பட்டாக் கத்தியுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் அட்டகாசம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தக் கல்லூரிக்குச் சென்று சென்னை மாநகர காவல் ஆணையர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். திரைப்படத்தில் ரவுடிகள் கத்தியை சுழற்றியபடியே செல்வது போல், காரனோடையில் இருந்து பிராட்வே சென்ற 57எப் என்ற வழித்தட பேருந்தில், படிக்கட்டில் தொங்கியபடியே பட்டாக்கத்தியை சுழற்றியபடி மாணவர்கள் பயணித்தனர். இதைக் கண்டு, பேருந்து பயணிகளும், பிற வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உறைந்து போயினர். இதேபோல சில மாதங்களுக்கு முன், திருவள்ளூரில் தொடர்வண்டி நிலையத்தில் ஒருவருக்கு ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதோடு, பட்டாக் கத்தியை நடைமேடையில் உரசியபடி சென்று மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இது போன்ற சம்பவங்களில் 6 மாதங்களில் மட்டும் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, புதுக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பயிலும் 33 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே, பேருந்துநாள் எனும் பெயரிலும், ரூட்டு தல என்ற பெயரிலும் இருவேறு கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வது, மாநகரப் பேருந்துகளைச் சிறைபிடித்து பிற பயணிகளுக்கு இடையூறு செய்வது என மாணவர்கள் மீதான நன்மதிப்பையும், நம்பிக்கையும் குறையும் வகையிலேயே அவர்களின் செயல்பாடு அமைந்திருந்தது. அவர்களைக் கைது செய்ததுடன் நடவடிக்கை முடிந்தது எனக் கருதாமல், காவல்துறையும், சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்கள், முதல்வர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனைகளை வழங்கியது. இருந்தபோதும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன இதையடுத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாநிலக் கல்லூரிக்கு சென்று மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி உரையாற்றினார். கல்லூரி முதல்வர் ராவணன் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பேசிய அவர், விரும்பிய பாடத்தைப் படித்து, படிப்பில் கவனம் செலுத்தி, தங்கள் துறையில் சாதிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். சிலரின் மோசமான செயல்களால் ஏற்படும் சமூக பாதிப்புக்களை மாணவர்களுக்குப் புரியும்படி எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார். யாரோ ஒரு சில மாணவர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதாகவும், பாரம்பரியமிக்க கல்லூரிக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயல்களைக் கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். போராட்டங்களை வியாபாரமாகச் செய்யும் அமைப்புக்களை நம்பி வழி தவற வேண்டாம் என்றும் அறிவுறுத்திய அவர், இது போன்ற இழி செயல்களை நிகழ்த்த மனஊக்;கம் தருகிற, அரசு நடத்தும் சாராய வியாபாரமும் மிகப் பெரும் காரணம் என்பது குறித்து அறிவுறுத்த முடியாமல் போனதுதான் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கிற அவலம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,898.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



