Show all

சிரிப்பாய் சிரிக்கிறது உலகம்! உலகிலேயே அதிக விலைக்கு கொரோனா தடுப்பூசி விற்பனை செய்யும் நாடாக மாறிய இந்தியா

கொரோனா தடுப்பூசி விலை 6 மடங்கு உயர்வு. உலகிலேயே அதிக விலைக்கு தடுப்பூசி விற்பனை செய்யும் நாடாக இந்தியாவை மாற்றியிருக்கிறது வீணாய்ப் போன இந்தப் பாஜக அரசு

27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் விலை 6 மடங்கு அதிகரித்து இருப்பதால், உலகிலேயே அதிக விலைக்கு தடுப்பூசி விற்பனை செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கியபோது, சேவைக் கட்டணமாக மட்டும் 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது அந்த கட்டணம் உயர்ந்து 300 ரூபாய் வரையில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அண்மையில் தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்து, தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்க ஒன்றிய பாஜக அரசு அனுமதி வழங்கியது. தொடர்ந்து, தனியார் நிறுவனங்களுக்கு கோவிஷீல்ட் 700 ரூபாய்க்கும், கோவாக்சின் 1200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்தன.

இதனிடையே, தனியார் தடுப்பூசி முகாம்களில் பெரும்பாலானவற்றை, அப்பலோ, மேக்ஸ், போர்டிஸ் மற்றும் மணிபால் ஆகிய, நான்கு கார்ப்ரேட் மருத்துவமனைகள் கைப்பற்றியுள்ளன. அங்கு, முன்பெல்லாம் 300 ரூபாய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கொள்முதல் விலையுடன் சேர்த்து தடுப்பூசி செலுத்த 1500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதன்படி, கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு மேக்ஸ் மருத்துவமனையில் 900 ரூபாயும், அப்பலோ மருத்துவமனையில் 850 ரூபாயும் அதிகபட்சமாக வசூலிக்கப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசிக்கு பெங்களூருவில் உள்ள பிஜிஎஸ் நிறுவனம், கொல்கத்தாவில் உள்ள உட்லான்ஸ் ஆகிய மருத்துவமனைகளில் 1500 ரூபாயும், மணிபால் மருத்துவமனைகளில் 1350 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  அப்பலோ, போர்டிஸ் போன்ற மருத்துவமனைகளில், 1250 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், கொரோனா தடுப்பூசியை அதிக விலைக்கு விற்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக பேசும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள், கொள்முதல் மற்றும் சேவை கட்டணத்துடன், சரக்கு சேவை வரி மற்றும் போக்குவரத்தின் போது ஏற்படும் சேதாரத்திற்குமான தொகையையும் சேர்ப்பதே, கட்டண உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கின்றன.

பல மாநிலங்களிலும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசிக்காக தனியார் மருத்துவமனைகளை நாட தொடங்கியுள்ளனர். இந்த சூழலில், விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிக்கான செலவை அரசே ஏற்றுள்ளன. தேச மக்களின் மீது அன்பில்லாமல் கார்ப்ரேட்டுகள் மீது அன்பு பாராட்டும் பாஜக ஆளும் இந்தியா மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணியை, தனியாருக்கும் ஒப்படைத்துள்ளது. இந்த சூழலில் ஏற்பட்டுள்ள விலை உயர்வால், ஏழை, எளிய மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இன்னும் பத்து விழுக்காட்டு மக்களுக்குக் கூட இந்தியாவில் இரண்டாம் தடவை தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை என்பது உலகமே சிரிப்பாய் சிரிக்கும் பேரவலமே ஆகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.