Show all

போராட்டம் வலுக்கிறது! சீனத் தலைமையை முன்னெடுக்கும் நிலைப்பாட்டில் ஆங்காங் அரசு - எதிர்நிலையில் மக்கள்.

ஆங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனாலும் சீனாவிற்கு கீழ் ஆங்காங்கிற்கு தனி அதிகாரம் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆங்காங் அரசு சீன ஆதரவு நிலை எடுக்க வேண்டிய நிலைப்பாட்டில் இருக்கிறது. மக்கள் எதிர்நிலையில் நின்று போராடி வருகிறார்கள். 

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளில் ஒன்றாக இருந்தது ஆங்காங். 22 ஆண்டுகளுக்கு முன்பு சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதியாக ஆங்காங் சீனாவிற்கு கையளிக்கப் பட்டது. 

ஆனால், அடிப்படையில் பிரித்தானிய சட்டத் திட்டங்களுக்கு அமைவாக ஆங்காங் தமக்கென தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களுடன் கூடிய பொருளாதார நிர்வாகச் சட்டங்களைக் கொண்டுள்ளது. அதாவது ஆங்காங் தனித்துவமான நாணயம், சட்டத் திட்டங்கள், அரசியல் முறைமை, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு விதிமுறைகள், பாதை விரிவாக்க அபிவிருத்தித் திட்டங்கள் போன்றன முற்றிலும் வேறானதும் தனித்துவமானதும் கொள்கைகளைக் கொண்டுள்ளது. 

உலகின் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஆங்காங் டாலர் 9 வது அதிக புழக்கத்தில் உள்ள நாணயமாகும். மக்கள் தொகையைப் பொருத்த மட்டில் உலகில் மக்கள் நெரிசல் கூடிய இடங்களில் ஆங்காங்கும் ஒன்றாகும். ஆங்காங் உலகின் அதி வளர்ச்சியடைந்த பொருளாதார மையங்களில் ஒன்றாகும்.

இன்று பார்க்கும் இடங்களெல்லாம் வானுயர் கட்டிடங்கள், மாடி மனைகள், அதிவேகப் பாதைகள், திகைக்கவைக்கும் மேம்பாலங்கள் என பொருளாதார வளர்ச்சியிலும், நாகரீக உச்சத்திலும் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இது ‘ஆசியாவின் நகரம்’ என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது.

(1984 இல் சீனாவும் பிரித்தானியாவும் ஏற்படுத்திக் கொண்ட ஓர் உடன்படிக்கையின் படி 1997 சூலை முதல் நாள் ஆங்காங் சீனாவிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. 
ஆனால் ஆங்காங் சீனாவிடம் கையளிக்கப்பட்டாலும், பிரித்தானியா மற்றும் சீனா இரண்டு நாடுகளும் கைசாத்திடப்பட்ட உடன்படிக்கையின் படி 1997 ஆம் ஆண்டில் இருந்து 2047ஆம் ஆண்டு வரை -ஆதாவது ஐம்பது ஆண்டுகள்- பிரித்தானிய ஆட்சி அமைப்புக்கு அமைவான முதலாளித்துவ கொள்கை நடைமுறையில் இருக்கும் என்பதும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.)

சீன-பிரித்தானிய கூட்டறிக்கையின்படியும், ஒரு நாடு இரண்டு முறைகள் எனும் கொள்கையின் அடிப்படையிலும் ஆங்காங்கிற்கு சிறப்பு நிர்வாகப் பிரதேசம் என்னும் அதிகூடிய தன்னாட்சி அதிகாரம் மக்கள் சீனக் குடியரசினால் வழங்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இதன் வெளிவிவகார கொள்கைகள், எல்லை பாதுகாப்பு போன்றன நடுச் சீன அரசிடமே உள்ளது. குடிநீர், மின்சாரம் போன்றனவும் சீனாவினூடாகவே கிடைக்கின்றது.

கூட்டறிக்கைப்படி, ஆங்காங், குறைந்தது 50 ஆண்டுகளுக்காவது, முதலாளித்துவப் பொருளாதார முறையையும், மக்களுடைய உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றையும் உறுதிப்படுத்துவதற்கு ஒத்துக்கொள்ளப் பட்டுள்ளது.

ஆங்காங் ஆட்சியாளர்கள், சீன அதிகார நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். மக்கள் ஆங்காங்கின் தனித்துவத்தையும், பிரித்தானிய அடிப்படைகளையும் விட்டு வெளியேற மனம் அற்றவர்களாக இருக்கிறார்கள். இதுதான் ஆங்காங்கில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களக்கான அடிப்படை காரணங்கள் ஆகும்.

பிரிட்டனின் நிர்வாகத்திலிருந்து ஆங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு நாளை ஆங்காங் ஆட்சியாளர்கள் கொண்டாட முன்னெடுத்து ஆங்காங் மக்களின் கடுப்பை கிளப்பி விட்டிருக்கிறார்கள். 
ஆங்காங் அரசின் அண்மைக்கால செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று அதன் நாடாளுமன்ற அவையின் வளாகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

ஆங்காங் நாடாளுமன்ற அவை அமைந்துள்ள கட்டடத்தின் முன்புற கண்ணாடிகளை பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் மற்றும் பொருட்களை கொண்டு உடைக்க அதை மற்ற போராட்டக்காரர்கள் சூழ்ந்து இருந்து பார்வையிட்டனர்.

நாடாளுமன்ற அவை அமைந்துள்ள கட்டடத்தின் வெளிப்புற கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிரான வாசகங்களை சுவர்களில் எழுதியதுடன், வெளியே சூழ்ந்திருக்கும் போராட்டக்காரர்களை நோக்கி கைகளை அசைத்தனர்.

ஆங்காங் அரசாங்கத்தின் சீன சார்புநிலைக்கு எதிராக கடந்த நான்கு மாதங்களாக அமைதி வழியில் நடைபெற்று வரும் போராட்டத்தின் வடிவம், நேற்று முதல் முறையாக திசைமாறியுள்ளது.

நாடாளுமன்ற அவையின் வளாகத்திற்குள் அத்துமீறி நுழையும் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், கைது செய்யப்படுவார்கள் உள்ளிட்ட எச்சரிக்கைகளை காவல்துறையினர் விடுத்தனர். இருப்பினும், கட்டடத்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தனர்.

ஆங்காங்கின் நாடாளுமன்ற அவைக்குள் நுழையும் போராட்டக்காரர்களின் முயற்சியின் தொடக்கத்தில் மிளகாய் பொடி தூவியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க நினைத்த காவல்துறையினர், பிற்பகுதியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆங்காங்கில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதுதான் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஆளும் ஆதிகார வர்க்கம், தங்கள் சார்ந்த இன, மத, மொழி, கொள்கைகளின்- அதிகார ஆளுமைகளுக்காக, வாக்குறுதிகள் மற்றும் ஒப்பந்தங்ளை காற்றில் பறக்க விட்டு, உரிமையுள்ள மக்களை ஒடுக்க முயன்று வருகின்றன. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,201.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.