Show all

விஜய் மல்லையாவை அடைக்கவுள்ள சிறையில், சுகாதார சூழலை நிர்பந்திக்கும் பிரிட்டன் அறங்கூற்று மன்றம்! கடனை அடைக்கத் தயார்: மல்லையா

15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரி வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு இங்கிலாந்து, வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்டிரேட் அறங்கூற்று மன்றத்தில் நடந்து வருகிறது. 

மல்லையா சார்பில் பதிகை செய்யப்பட்ட மனுவில், இந்திய அரசிடம் இருந்து கருணை எதையும் தான் எதிர்பார்க்கவில்லை எனவும், கடன் தொகையை கட்டத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, மல்லையா, பிரிட்டன் குடியுரிமை பெற்றவர், அவர் கைது செய்யப்பட்டால் இந்திய சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியச் சிறைகளில் மிக மோசமான சூழல் நிலவுகிறது. கொசுக்கடி, இருண்ட அறைகள், சுகாதாரமற்ற சூழலுடன் இருக்கிறது என அவரது சார்பில் அணியமான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் விசாரணையின்போது மல்லையாவை இந்தியா வசம் ஒப்படைத்தால் அவர் கைது செய்யப்பட்டு எந்த சிறையில் அடைக்கப்படுவார் என அறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்தநிலையில், இந்த வழக்கு விசாரணை அறங்கூற்றுமன்றத்தில் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது இந்திய அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், விஜய் மல்லையா இந்தியா அனுப்பப்பட்டால் அவர் கைது செய்யப்பட்டு, மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி அந்த சிறையின் புகைப்படங்களும் அறங்கூற்றுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன.

அப்போது மும்பை ஆர்தர் சாலை சிறையின் புகைப்படங்களைப் பார்த்த அறங்கூற்றுவர் அதனைப் பார்த்து முடிவெடுக்க முடியவில்லை எனக் கூறினார். புகைப்படங்கள் தெளிவாக இல்லாததால் சிறை உட்புறத்தை தெளிவாக தெரிந்து கொள்ளும் வகையில் காணொளியை அறங்கூற்றுமன்றத்தில் சமர்பிக்குமாறு கூறினார்.

நண்பகல் நேரத்தில் காணொளி எடுக்குமாறும், அப்போது சிறை அறைக்குள் சூரிய ஒளி இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்தும் அளவிற்கு காணொளி காட்சி தெளிவாக இருக்க வேண்டும் என அறங்கூற்றுவர் கூறினார். காணொளியை அடுத்த விசாரணையின்போது பதிகை செய்ய வேண்டும் எனக் கூறிய அறங்கூற்றுவர் மல்லையாவுக்கு வழங்கப்பட்ட பிணையை, நாற்பது நாட்கள் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

விஜய் மல்லையாவை அடைக்கவுள்ள சிறையில், சுகாதார சூழலை நிர்பந்திக்கும் பிரிட்டன் அறங்கூற்று மன்றம்! கடனை அடைக்கத் தயார்: மல்லையா. உண்மையில்  என்னதான் பிரச்னை?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,865.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.