Show all

போர்த்துக்கீசிய மொழி! உலக மொழிகள் வரிசையில்.

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: போர்த்துக்கீசிய மொழி பிரேசில் நாட்டின் ஆட்சி மொழியாகும். பிரேசில் என்றதும் தமிழகத்தின் விளையாட்டு ஆர்வலர்களுக்கு அழகிய தமிழ்ப்பெயருக்குச் சொந்தமான, இளவேனில் வாலறிவன் நினைவுக்கு வருவார். ஆம் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் கலந்து கொண்ட, உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியை அண்மையில் முன்னெடுத்த நாடுதான் பிரேசில் 

போர்த்துக்கீசிய மொழிக்கு சொந்தமான பழைய நாடு என்று சொன்னால் அது போர்ச்சுக்கல் ஆகும். போர்த்துக்கீசிய மொழி உலகில் ஆறாவது மிக அதிக அளவில் பேசப்படும் மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது ஐரோப்பிய மொழியாகவும் அறியப்படுகிறது. 22 கோடி மக்கள் போர்த்துக்கேய மொழியைத் தாய்மொழியாகவும், உலகில் மொத்தம் 26 கோடி மக்கள் இம்மொழியை பேசுபவர்களாகவும் உள்ளனர்.  இது இலத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. 

ஐரோப்பிய நாடுகளில்- கடல் கடந்து வந்து வணிகம் புரிந்து சென்றுகெண்டு இருந்த தமிழர்களின் இருப்பிடத்தை அறிய, ஒட்டுமொத்த ஐரோப்பாவே முயன்று வந்த நீண்ட நெடு முயற்சியில்-  இந்தியாவிற்கு முதலாவதாக வந்த வாஸ்கோடகாமா போர்த்துக்கீசிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட போர்த்துகீசியர் ஆவார். 

போர்ச்சுக்கல், பிரேசில், கேப் வெர்டே, கினி-பிசாவு மொசாம்பிக், அங்கோலா, சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகளின் ஒரே அதிகாரப்பாட்டு மொழியாகும் போர்த்துக்கீசிய மொழி. கிழக்குத் திமோர் எக்குவடோரியல் கினி, சீனாவில் மக்காவ் மாநிலம் போன்றவைகளில் இணை அதிகாரப்பாட்டு மொழியாகவும் உள்ளது. 

காலனித்துவ காலங்களில் விரிவாக்கத்தின் விளைவாக, போர்ச்சுகலின் ஒரு கலாச்சார இருப்பு மற்றும் போர்த்துக்கேய மொழி பேசுபவர்கள் இந்தியாவின் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றனர். 

ஐரோப்பிய ஒன்றியம், தெற்கத்திய பொதுச் சந்தை, அமெரிக்க நாடுகள் அமைப்பு, மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரப்பாட்டு மொழியாகும்.

பல நாடுகளில் கணிசமான போர்த்துக்கேய மொழி பேசும் குடியேற்ற சமூகங்களும் உள்ளன. அன்டோரா, பெர்முடா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்சி, நமீபியா, பராகுவே, மக்காவ், சுவிட்சர்லாந்து, வெனிசுலா, மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகல். இந்தியாவின் முன்னாள் போர்த்துக்கேய ஆட்சிப்பகுதியான கோவா, டமன் மற்றும் டையூவில் போர்த்துக்கேய மொழியை இன்னும் சுமார் 10,000 மக்களால் பேசப்படுகிறது.

போர்த்துக்கீசிய மொழிக்கான முதன்மையான நாடாக இருந்து வருவது பிரேசில் ஆகும். போர்த்துகீசியரின் ஆட்சியில் முன்பு இருந்ததால் போர்த்துகீச மொழி பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரப்பாட்டு மொழியும் ஆகும். தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே. அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே.

உலகத்தின் நுரையீரல் பகுதி என்று அழைக்கப்படுகிற அமேசான் காட்டுப்பகுதி, அண்மையில் அங்கே தீப்பற்றி பரபரப்பு ஏற்படுத்தியது எல்லாம் இந்தப் போர்த்துக்கீசிய நாடான பிரேசிலில்தான். இன்றைய இந்தியக் குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மோடியால் அழைக்கப்பட்டு வருகை புரிந்திருக்கிறார் பிரேசில் நாட்டு அதிபர்  ஜெயிர் போல்சொனாரோ.  

பிரேசில் ஒரே மொழியைத் தேசிய மொழியாகக் கொண்டிருந்த போதும், பிரேசில் பல மாநிலங்களின் கூட்டாட்சி ஒன்றியமாக அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிறது. பிரேசில் 26 மாநிலங்கள், ஒரு கூட்டரசு மாவட்டம் மற்றும் நகராட்சிகளின் கூட்டமைப்பாகும். மாநிலங்களுக்குத் தன்னாட்சி உடைய நிர்வாக அமைப்பு உள்ளது. இவை தங்களுக்கான வரி விதித்தல், வசூலித்தல் அதிகாரங்களைக் கொண்டதோடன்றி கூட்டரசின் வரி வருமானத்திலிருந்தும் பங்கு பெறுகின்றன. மாநிலத்தின் ஆளுநரும் ஓரவை சட்டப்பேரவையும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பொதுச்சட்டத்தை நிர்வகிக்கும் கட்டற்ற அறங்கூற்று மன்றங்களும் உள்ளன. இருப்பினும் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களைப் போன்று இவற்றிற்கு சட்டமியற்றலில் முழுமையான சுதந்திரம் இல்லை. 

நகராட்சிகள், மாநிலங்களைப் போலவே, தன்னாட்சியான நிர்வாகத்தையும், வரி விதிக்கும் வசூலிக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளன. தவிர ஒன்றிய அரசும் மாநில அரசும் வசூலிக்கும் வரிகளில் பங்கு கிடைக்கிறது. இவை கூட்டாட்சியில் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு இணையாக உள்ளன. இவற்றிற்கிடையே அடுக்கதிகாரம் கிடையாது. ஒவ்வொரு நகராட்சியின் மேயரும் நகர மன்ற உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.