Show all

தமிழர் வாழ்க்கை நெறி ஐந்திணையியம்! உலகினர் வாழ்க்கை நெறி கிறித்துவம், முகமதியம், பௌத்தம், சமனம், சீக்கியம், ஹிந்துத்துவம் என்கிற மதங்கள்

தமிழர் வாழ்க்கை நெறி ஐந்திணையியம் என்னும் பொருள் இலக்கணம். இவ்வாறன பொருள் இலக்கணத்தை உலகினர் முன்னெடுக்காத நிலையில் - அந்தந்த இன மக்களை நெறிப்படுத்த அந்தந்த இனத்தில் தோன்றிய சீர்திருத்தவாதிகள் அந்தந்த இன மக்களுக்கான வாழ்க்கை நெறியாக கிறித்துவம், முகமதியம், பௌத்தம், சமனம், சீக்கியம், ஹிந்துத்துவம் என்கிற மதங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை அமைந்தது. கொண்டாடுவோம் மதங்களோடு, தமிழர்தம் ஐந்திணையியத்தையும்.

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகில் எந்த மொழிக்கும், மொழி இலக்கணம் இருக்கிறதே அன்றி அந்த மொழியைத் தாய்மொழியாக கொண்ட இனத்தினருக்கு வாழ்க்கை இலக்கணம் என்ற ஒன்று இல்லை. ஆனால் தமிழினத்தினருக்கு இலக்கணம் என்கிற போதே மொழிக்கும் வாழ்க்கைக்குமாக இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு வாழ்க்கைக்கும் இலக்கணம் பேணப்பட்ட காரணத்தால், தமிழரை சீர்திருத்த ஒரு இனத்தலைவரோ, அந்த இனத்தலைவர் முன்னெடுத்த மதமோ, மதக்கோட்பாடுகளைத் தெரிவிக்கும் வேதமோ தமிழர்களுக்குத் தேவைப்படவில்லை. தமிழரின் வாழ்க்கைக்கான இலக்கணம் பொருள் இலக்கணம் எனப்பட்டது. அது தமிழரின் குடும்ப வாழ்க்கைகானது அகம் அல்லது அகப்பொருள் அல்லது ஐந்திணை அல்லது அகன்ஐந்திணை எனப்பட்டது. தமிழரின் சமுதாய வாழ்க்கைக்கான பொருள் இலக்கணம் புறம் அல்லது புறத்திணை எனப்பட்டது.

அகத்திணையில் குடும்ப வாழ்க்கைக்கான அனைத்து செய்திகளும்  நிறைவு செய்யப்பட்டுள்ளது. புறத்திணையில் நடப்புக்குப் பொருந்தாத போர்நெறிகள் இடம்பெற்றிருந்தாலும், சமுதாய வாழ்க்கைக்கான அனைத்து செய்திகளும் புறத்திணையில் இடம் பெற்றிருக்கிறது. தமிழர்தம் மேல்கணக்கு நூல்கள் எனப்படும் பதினெட்டு நூல்களும் பொருள் இலக்கணத்திற்கான வாழ்வியலே.

ஆனால் உலகினர் யாருக்கும் பொருள் இலக்கணம் இல்லாத நிலையில், அவர்களுக்கு வாழ்வதற்கான இலக்கணமாக மதம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மதத்தையும், அந்த இனத்தின் சமுதாய சீர்திருத்தவாதியாக ஒருவர் முன்னெடுக்க, விருப்பம் உள்ளவர்கள் அந்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள். 

தமிழர்தம் வாழ்க்கை இலக்கணமான பொருள் இலக்கணத்தின் அகப்பொருள் இலக்கணத்தில்: 
திணை என்ற தலைப்பில்- குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை திணைகள். 
முதல் பொருள் என்ற தலைப்பில்- இடம் என்பதில் ஐந்து திணைகளுக்கும் உரிய இடங்கள் பொழுது என்ற தலைப்பில் பெரும்பொழுது, சிறுபொழுது என்கிற கால அளவுகள். 
கருப்பொருள் என்கிற தலைப்பில்- 1தெய்வம். 2மக்கள், 3பறவை, 4விலங்கு, 5நீர்நிலை, 6மலர், 7மரங்கள், 8உணவு 9பறை 10யாழ் 11பண் 12தொழில் என்கிற குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் விளக்கப்பட்டு விடுகின்றன. 
அடுத்து உரிப்பொருள் என்ற தலைப்பில் திணைக்கான ஒழுக்கம் பற்றி தெரிவிக்கப்படுகிறது 
அகவாழ்க்கையில் களவியல். கற்பியல் என்று இரண்டு நிலைகள் தெரிவிக்கப்படுகின்றன. இவையெல்லாம் தமிழர்தம் வாழ்க்கை முறைகளிலிருந்தே சான்றோர் பெருமக்களால் முன்னெடுக்கபட்டு இருக்கிறது. அதனால் தமிழர்களுக்கு, சமுதாய சீர்திருத்தவாதியாக ஒருவர் தலைமையில் முன்னெடுக்கப்படும் மதம் கிடையாது. 

தமிழர் விழாக்களும் விழாமல் இருப்பதற்கு விழா என்பதான இயற்கை, சமுதாயம், தொழில், உற்பத்தி, வணிகம் சார்ந்ததாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. 
தமிழர்களுக்கு சித்திரையில் புத்தாண்டு விழா, ஆடியில் காவிரி நீர்ப்பெருக்கு விழா, கார்த்திகையில் விளக்கீட்டு விழா, தையில் பொங்கல் விழா மட்டுமே விழாக்கள் இவைகள், விழாமல் இருப்பதற்கு விழா என்று இயற்கை, சமுதாயம், தொழில், உற்பத்தி, வணிகம் சார்ந்ததே முன்னெடுக்கப்படும் விழாக்கள் ஆகும். 
தமிழர் முன்னெடுக்கும் கடவுளும், இறையும் உயர்திணையோ அல்லது அஃறிணையே அல்ல அவை இயக்கம் சார்ந்த பொருள்கள். அந்த இயக்க ஆற்றல் தொய்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிற தெய்வங்கள் நம்மோடு வாழந்த சான்றோர் பெருமக்கள். வீட்டு தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு என்பன. 

வட இந்திய மக்களுக்கு- ஹிந்து மதத்திற்கான அடிப்படைகள் தமிழர்களாலும், ஹிந்தி மொழிக்கான எண்பது விழுக்காட்டுச் சொற்கள் முகமதியர்களாலும் வழங்கப்பட்ட கொடையாகும். 
ஹிந்து மதத்தை தமிழர்கள் அங்கீகரிக்க முடியாத  வகையில், தமிழர் பொருளாக கருதியிருந்த இறையாற்றல்களுக்கு பாலின அடையாளம் கற்பித்து, ஆபாசக் கதைகளையும், உயர்திணை அஃறிணை வேறுபாடு இல்லாமல், தவறான உறவுப் பழக்கங்ளையும் அதன்மீது ஏற்றி காமவயமாக முன்னெடுத்திருக்கிறார்கள் வடஇந்தியர்கள். 
ஐந்திணையியத்தில்- தலைவன் தலைவியின் பெயரைச் சொன்னாலே அது அகஇலக்கணம் அல்ல என்று புறத்திற்கு தள்ளி விடுவார்கள். தலைவன், தலைவிக்கு அதிக அகவை வேறுபாடு இருந்தாலே, பெருந்திணை என்றே இலக்கணம் வகுப்பார்கள். தலைவன் தலைவியிடம் ஒரு பக்கம் விருப்பம் என்றால் அதுவும் அகமாகாது கைக்கிளை ஆகிவிடும். 

ஹிந்து பண்டிகைகள் அனைத்திற்கும் ஆபாசக் கதையும் அதைக் கொண்டாடுவதற்கு திதியும் இருக்கும். தமிழர்விழாக்களுக்கு சித்திரை ஒன்று, தை ஒன்று, ஆடி பதினெட்டு என்று நாட்களும், விழாமல் இருப்பதற்கு விழா என்பதான இயற்கை, சமுதாயம், தொழில், உற்பத்தி, வணிகம் சார்ந்த காரணங்களே இருக்கும். 

மகாசிவராத்திரி, ஹோலிப்பண்டிகை, ஸ்ரீராமநவமி, அஷயதிருதியை, ஸ்ரீவரலட்சுமி விரதம், சங்கரன்தபசு, ஸ்ரீமாகசங்கட சதூர்த்தி, ஸ்ரீகோகுலஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, மாஹாளாய அமைவாசை, நவராத்திரி, ஸரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, வைகுண்டஏகாதசி என்பன அனைத்துக்கும் புராண ஆபாசக் கதைகளும், காரணங்களும் சொல்லபட்டிருக்கும் ஹிந்து பண்டிகைகள் ஆகும். 

உலகினர் கிறித்துவம், முகமதியம், பௌத்தம், சமனம், சீக்கியம், ஹிந்துத்துவம் என்கிற மதம் என்கிற வாழ்க்கை நெறியை கொண்டிருக்கின்றார்கள் என்றால் தமிழர் அகத்திணை அல்லது ஐந்திணை என்கிற பொருள் இலக்கணத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டிருக்கின்றனர். தமிழர் தங்கள் மதமில்லாதவர் என்று தெரிவிப்பதால், தமிழர் ஹிந்துக்கள் என்று அடையாளப்டுத்தப்பட்டு, ஹிந்து மதத்தின் ஆபாசக் கதைகளை சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர்.   தமிழர் மதம் என்று கேட்கும் போது ஐந்திணையியம் என்று தெரிவிப்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.