Show all

தமிழக மக்களும் இதையேதான் சொல்லிக் கொண்டுள்ளனர்! மாநிலங்கள், நகரங்களை முடக்குவது ஆபத்தானது: உலக நலங்குத்துறை அமைப்பு எச்சரிக்கை

அரசு சொல்கிறதே என்று கொரோனா பரவல் தடுப்பு முயற்சியாக ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை, தமிழக மக்கள் சிறப்பாக பின்பற்றினாலும், மாநிலங்கள், நகரங்களை முடக்குவது ஆபத்தானதாயிற்றே? எல்லை இல்லாத தொழில் மந்தம் பொருளாதார முடக்கம் எல்லாம் நாட்டை அலைகழிக்குமே என்று அங்கலாய்த்துக் கொண்டுதாம் இருக்கின்றனர் தமிழக மக்கள்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலக நாடுகளில் இருந்து கொரோனா பரவலுக்கான ஊடகமாக செயல்பட்டவர்கள் யார்?
1. சுற்றுலாப் பயணிகள்.
2. இங்கே ‘நீட்’டால் கல்வி உரிமை மறுக்கப்பட்டு உலக நாடுகளுக்கு மருத்துவம் படிக்கப் போனவர்களை விடுமுறை கொடுத்து வெளிநாடுகள் வெளியேற்றியதால், இந்தியா திரும்பியவர்கள்.
3. வணிகத்திற்காக வெளிநாடுகளுக்குப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தவர்கள்.
4. கணிகா கபூர் போல கலைத்துறை சார்ந்து வெளிநாடுகள் சென்று திரும்பியவர்கள்.
5. மோடி போல வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த அரசு ஆட்சியாளர்கள் அதிகாரிகள். இன்னும் கொஞ்சம் பேர்கள் 
6. இந்தியாவிற்கு அன்னியச் செலாவணி ஈட்டித்தருகிற வெளிநாடுகளில் வேலையிலிருக்கும் மனிதவளங்கள். அவர்களும் கூட குறைந்த கால ஒப்பந்தத்தில் போனவர்கள் மட்டுமே உலகநாடுகளால் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர்.

உண்மையில் இந்த வகையானவர்கள் மட்டுமே தமிழகத்தில் கொரோனா தாக்கப்பட்டவர்களாக சிகிச்சையில் உள்ளனர். அவர்களோடு தொடர்பிலிருந்தவர்களுக்கோ அவர்களது உறவினர்களுக்கோ யாருக்கும் கெரோனா தொற்று தமிழகத்தில் இல்லை. இந்த நிலையில்: 

இந்திய வந்த இவர்களை தனிமைப் படுத்தியிருந்தாலே போதும். அதுவும் கூட செய்யாத நிலையில் அவர்களோடு தொடர்பு கொண்டவர்களைப் பாட்டியலிட்டு தனிமைப் படுத்துவதும் எளிமையானதே.

இவ்வளவு பெரிய நிர்வாக அமைப்பு உடைய நடுவண் அரசு, மாநில அரசு, பெரிய பெரிய பணமுதலைகளை கோட்டை விட்டுவிட்டு நாடுமுழுவதும் சிறுகுறு முதலாளிகளை வளைத்துப் பிடிக்கிற வருமான வரித்துறை அதிகாரிகள், இராணுவம், காவல்துறை, அறங்கூற்றுத்துறை, நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை, உளவுத்துறை, வருவாய்த்துறை, ஆட்சிப்பணித்துறை, இப்படி ஆயிரம் ஆயிரம் துறை அதிகாரிகளை முடுக்கி ஒற்றைத் தீர்வை முன்னெடுத்து கொரோனா பரவலை எளிமையாகவே தடுக்கலாம்.

மாறாக முன்பு கருப்புப் பணத்தைப் பிடிப்பதற்கு- எலிக்குப் பயந்து கூரையைக் கொளுத்திய கதையாக பணமதிப்பிழப்பு செய்தது போலவே- தற்போதும் நடுவண் பாஜக அரசு- கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து, இதனால் பல்வேறு துறைகளை முடக்கியுள்ளதை அறியாமை சார்ந்த முயற்சியாகவே தமிழக மக்கள் கருதுகின்றார்கள்.

இந்த நிலையில்தாம்:- கரோனா நுண்ணுயிரி தொற்றுக்கு எதிரான நடவடிக்கையாக, வெறுமனே மாநிலங்கள் மற்றும் நகரங்களை முடக்குவது ஆபத்தானது என உலக நலங்குத்துறை அமைப்பு எச்சரித்துள்ளது. 

இதுதொடர்பாக உலக நலங்குத்துறை அமைப்பின் அவசரநிலைமைக்கான உயர்நிலை வல்லுநர் மைக் ரியான் கூறியதாவது: கரோனா நுண்ணுயிரிக்கு எதிரான நடவடிக்கையாக, வெறுமனே மாநிலங்கள் மற்றும் நகரங்களை முடக்கி தற்போதைக்கு தப்பித்துக் கொள்வது நிலையான தீர்வு ஆகாது உண்மையில் அது ஆபத்தான நடவடிக்கையே. 

நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது என்னவென்றால், நோய்வாய்ப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது, தொற்று உள்ளவர்களைக் கண்டுபிடிப்பதுடன், அவர்களைத் தனிமைப்படுத்துவது, அவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்துவதுதாம்.

திறமான பொது நலங்கு நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், நகரங்கள், மாநிலங்கள், மாகாணங்கள் என முடக்கப்படுவது ஆபத்தான ஒன்று என்றும், அவை முடக்கப்படும்போது, தப்பித்து விட்டு, நோய் மேலும் தீவிரமாகப் பரவும்போது என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார்.

பரிசோதனைகளுடன் கட்டுப்பாடுகளையும் இணைத்து, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளை மேற்கோள் காட்டிய அவர், நாம் நுண்ணுயிரி தொற்று பரவுவதைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகும் தொற்று குறித்த ஆய்வைத் தொடர வேண்டும், நுண்ணுயிரியை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார்.

பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பயனுக்குவர குறைந்தது ஒரு ஆண்டாவது ஆகும். அது முற்றிலும் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு தடுப்பூசியும் உடனே அங்கீகரிக்கப்படாது, அங்கீகரிக்கப்பட்டாலும் ஒரு ஆண்டிற்குப் பரவலாகக் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. மக்கள் இயல்பாக இருக்க வேண்டும். நாம் பாதுகாப்பாக இருக்க உடனடியாகச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். உலகத்தில் யாராவது மருந்து கண்டுபிடிக்கட்டும் என்று எல்லோருமே ஓடி ஒளிந்தால் அதுவே மக்களுக்கு நரகமாகி விடுமே. எப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது என்று கடுமையாக எச்சரிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.