Show all

இலை ஓட்டை சிக்கல் முடிவுக்கு வந்தது!

அடுத்து தமிழக ஆட்சிப் பந்தியில் யாரை அமர்த்துவிப்பது என்று தமிழக மக்கள் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் நிலையில் என்னுடைய இலைதான் ஓட்டையில்லாத இலை எனக்கே பந்தி பரிமாற வேண்டும் என்பதாக கடந்த பத்து நாட்களாக ஓடிக் கொண்டிருந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு வழியாக இன்று முடிவுக்கு வந்துள்ளது. 

21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இதனை துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள இராயப்பேட்டை பகுதியில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் புலி ஒப்பனை கட்டி ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு கடந்த 10 நாட்களாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மாறி மாறி அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்களது இல்லங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். காலையில் தொடங்கி இரவு வரையும் ஆலோசனை நடைபெற்றது. விடிய விடிய நடந்த ஆலோசனை அதிகாலையில் முடிவுக்கு வந்தது. 

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், இன்று காலை 10 மணிக்கு நல்ல செய்தி கிடைக்கும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் நடக்கிறது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறிவிட்டு சென்றார். 

அதிமுக முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியான நிலையில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.