ஞாயிறு மறைவு நேரத்தில் தாஜ்மகாலைப் பார்த்து மகிழப்போவது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆசையாம். அதை நிறைவு செய்யும் வகையில் அவரின் பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஞாயிறு மறைவு நேரத்தில் தாஜ்மகாலைப் பார்த்து மகிழப்போவது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆசையாம். இதன் பொருட்டு, பயணத்திட்டத்தில் மற்ற பகுதிகளுக்கு நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக வருகிற திங்கட்கிழமை இந்தியா வருகிறார். அவர் வரும் “ஏர்வோர்ஸ்” சிறப்பு விமானம் திங்கட்கிழமை மதியம் 11.55 மணிக்கு ஆமதாபாத் வந்து சேரும். ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து அவர் நேரடியாக மோதிரா துடுப்பாட்ட அரங்கிற்கு செல்கிறார். அவர் செல்லும் வழி நெடுக லட்சக்கணக்கானவர்கள் திரண்டு நின்று டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துடுப்பாட்ட அரங்கத்திற்கு டிரம்ப்புடன் தலைமைஅமைச்சர் மோடியும் செல்வார். அங்கு “வணக்கம் டிரம்ப்” நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் டிரம்ப், மோடி இருவரும் சிறப்புரையாற்ற உள்ளனர். உலகப்புகழ் பெற்ற காதல் அடையாளமான ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை ஞாயிறு மறையும் நேரத்தில் பார்த்தால் மிக சிறப்பாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு குஜராத் நிகழ்ச்சிகளை ஓரிரு மணி நேரத்துக்குள் முடித்து விட்டு டிரம்ப் ஆக்ரா புறப்பட்டு செல்வார் என்று தெரிய வந்துள்ளது. அங்கு தாஜ்மகால் முழுவதையும் அவர் சுற்றி பார்க்க உள்ளார். இதையடுத்து தாஜ்மகால் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்று இரவு டிரம்ப் ஆக்ராவில் இருந்து டெல்லி செல்கிறார். டெல்லியில் குடிஅரசுத்தலைவர் மாளிகையில் டிரம்ப்புக்கு இரவு விருந்து அளிக்கப்படுகிறது. இதில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். அன்று இரவு டெல்லியில் உள்ள மின்மினி உணவகத்தில் டிரம்ப்பும் அவரது மனைவியும் தங்குகிறார்கள். டிரம்ப்புடன் அமெரிக்காவில் இருந்து உயர்மட்ட குழுவும் வருகிறது. அவர்களும் மின்மினி உணவகத்தில் தங்குகிறார்கள். மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவு இடத்துக்கு செல்கிறார்கள். அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மலர் தூவி மரியாதை செலுத்துவார். அதன் பிறகு டிரம்ப்- மோடி இருவரும் கலந்துரையாடல் நடத்துவார்கள். இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டிரம்ப்பின் 2 நாள் சுற்றுப்பயணத்தில் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகாது. என்றாலும் இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உறவை மேம்படுத்துவது குறித்து மோடியும், டிரம்ப்பும் கலந்துரையாடல் நடத்த உள்ளனர். இந்தியாவில் டிரம்ப் சுமார் 36 மணி நேரமே இருப்பார் என்று தெரிய வந்துள்ளது. ஆமதாபாத், ஆக்ரா, டெல்லி ஆகிய 3 நகரங்கள் தவிர அவர் வேறெங்கும் செல்லவில்லை. வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை. டிரம்ப் பயணத்துக்காக அமெரிக்காவில் இருந்து 7 விமானங்களில் பாதுகாப்பு கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



